
சென்னை , ஜூன் 12 : தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்காக 134 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ‘குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026’ செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று அறிவித்துள்ளார். எல்நினோ தாக்கத்தின் காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணை உரிய தேதியான ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பிலும் உழவர்களின் வாழ்வாதாரத்திலும் நெல் சாகுபடி முதன்மையான பங்கு வகிக்கிறது. மாநிலம் முழுவதும் சராசரியாக 52.72 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களின் முழுப் பகுதிகளிலும் கடலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் ஆண்டுதோறும் 20.65 இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மட்டும் குறுவைப் பருவத்தில் சராசரியாக 5.14 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கமாகும். அதேவேளையில், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில் ஆண்டுக்கு 32.07 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கும் நிலையில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மட்டும் அங்கு 5.48 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.
பொதுவாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் நடப்பு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் எல்நினோ நிகழ்வின் காரணமாக மழை அளவு 90 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது தென்மேற்குப் பருவமழை தாமதமாகி வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.56 அடியாகவும், நீர் இருப்பு 41.52 டிஎம்சியாகவும் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக வழக்கமான நாளான இன்று மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நடைபெறும் 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிப் பரப்பு இந்த ஆண்டு குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் டெல்டா பகுதிகளில் உள்ள வடிமுனைக் குழாய்க் கிணறுகள் எனப்படும் ஃபில்டர் பாயிண்ட்டுகள் மூலமாக 3.55 இலட்சம் ஏக்கர் வரை சாகுபடி செய்ய முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் பருவமழை சீராக இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் நெல் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரிக்கவும் இந்தச் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் வடிமுனைக் குழாய்களைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் உழவர்களை ஊக்குவிப்பதற்காக 77.50 கோடி ரூபாயும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை, சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்கப்படுத்த 57.33 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பு நிதியின் மூலம் நெல் இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, மானிய விலையில் விதை நெல் விநியோகம் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நெல் இரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக வேளாண் இயந்திரமயமாக்கல் மற்றும் நீர் மேலாண்மை முறைகளை மேம்படுத்துவது முன்னிறுத்தப்பட்டுள்ளது. தரமான விதைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நெல் சாகுபடிப் பரப்பு, உற்பத்தித் திறன் ஆகியவற்றை அதிகரித்து, விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதுடன் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இது வழிவகுக்கும்.
சாகுபடிப் பணிகளுக்கு முன்னோடியாக வேளாண் பொறியியல் துறை மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கிலோமீட்டர் நீளமுள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் 10 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டுள்ளன. அதேபோல் நீர்வளத்துறை மூலமாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,971 கிலோமீட்டர் நீளமுள்ள ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 97 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தற்போது குறுவை சாகுபடிப் பணிகளுக்காக 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகளும், 4.02 இலட்சம் மெட்ரிக் டன் உரங்களும் வேளாண் கூட்டுறவு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பாசனத் தேவையை நிறைவு செய்யும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணிநேரம் வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெற்றுப் பயன்பெறுமாறு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததால் ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதியான இன்று பாசனம் மற்றும் குடிநீருக்காகத் திறக்கப்படும் தண்ணீர் இம்முறை திறக்கப்படவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அணையிலிருந்து எப்போது தண்ணீர் திறந்துவிடப்படுகிறதோ, அப்போது சாகுபடிப் பணிகளைத் தொய்வின்றி உடனடியாகத் தொடங்குவதற்கு ஏதுவாக இந்த 134 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ் குருவை சாகுபடிக்குத் தேவையான உள்கட்டமைப்புகள் மற்றும் இடுபொருட்கள் முழு வீச்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் விதைகளும், 4 லட்சம் மெட்ரிக் டன் உரங்களும் தற்போது கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பாசன வசதியை மேம்படுத்தும் பொருட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்காகத் தடையற்ற மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நீர் பற்றாக்குறைச் சூழலிலும் விவசாயப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் இந்த 134 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குருவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தினை முழுமையாகப் பயன்படுத்தி சாகுபடி பணிகளைச் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.








