
Madurai , May 13 : காவல் சித்திரவதை மரணங்கள், ஸ்டெர்லைட் 16 உயிரிழப்புகள் தொடர்பாக முதல்வர் விஜயிடம் மக்கள் கண்காணிப்பகம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது.
முதல்வர் விஜயிடம் மக்கள் கண்காணிப்பகம் வைத்த முக்கிய கோரிக்கைகள்
மதுரையில் நடைபெற்ற முக்கியமான பத்திரிகையாளர் சந்திப்பில், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு புதியதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜயை வரவேற்றதுடன், மனித உரிமைகள், காவல் சித்திரவதை மரணங்கள் மற்றும் ஸ்டெர்லைட் போராட்ட உயிரிழப்புகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த சந்திப்பில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விரிவாக பேசினர். குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூலை 14, 2025 அன்று தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய், காவல் சித்திரவதையால் உயிரிழந்த 20 குடும்பங்களை நேரடியாக சந்தித்து பேசிய நிகழ்வை “வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு” என அவர்கள் குறிப்பிட்டனர்.
அந்த சந்திப்பில் எந்த அரசியல் தலைவரும் இதுவரை செய்யாத வகையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரங்களை நேரில் கேட்டதாகவும், ஒவ்வொரு குடும்பத்துடனும் தனித்தனியாக நேரம் செலவிட்டதாகவும் கூறப்பட்டது.
“20 குடும்பங்களை மூன்று மணி நேரம் சந்தித்த விஜய்” – மக்கள் கண்காணிப்பகம்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் பேசும்போது, “தமிழ்நாட்டில் காவல் சித்திரவதையால் உயிரிழந்த 20 குடும்பங்களை விஜய் தனது பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து நேரடியாக சந்தித்தார். அந்த நிகழ்வு பெரிய அளவில் வெளியே வரவில்லை. ஆனால் அது மனித உரிமை வரலாற்றில் முக்கியமான தருணம்” என்றார்.
Also Read : இளம்பிள்ளை பரபரப்பு: பழிவாங்க சென்ற கணவன், தவறான நபரை வெட்டி தாக்கு
அவர் மேலும் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கதறி அழுதபோது, விஜய் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறியதாக தெரிவித்தார்.
அதேபோல், செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவன் கோகுல்ராஜ் சம்பவம் குறித்து பேசும்போது விஜய் கண்கலங்கியதாகவும், “இந்த குடும்பங்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?” என்ற அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதாகவும் ஆசீர்வாதம் குறிப்பிட்டார்.
“ஒரு சினிமா நடிகர் அல்லது வளர்ந்து வரும் அரசியல் தலைவர் என்ற அளவிற்கு அல்லாமல், மனித உரிமை பார்வையில் அந்த குடும்பங்களின் வலியை உணர்ந்த மனிதராக விஜயை அப்போது பார்த்தோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
“காவல் சித்திரவதை எதிர்ப்பு போராட்டம் நடத்திய முதல் கட்சி” என்ற பாராட்டு
ஜூலை 15ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற மனித உரிமை மற்றும் காவல் சித்திரவதை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் மக்கள் கண்காணிப்பகம் முக்கியமாக நினைவுகூர்ந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், நீதிமன்ற அனுமதி பெற்று இறுதிநேரத்தில் நடத்தப்பட்டதாகவும், அதில் சுமார் 50,000 பேர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
“ஒரு புதிய அரசியல் கட்சி தொடங்கியவுடன் மனித உரிமை மற்றும் காவல் சித்திரவதை எதிர்ப்பு கேள்வியை மாநில அளவிலான போராட்டமாக மாற்றியது தமிழக வெற்றி கழகம்தான்” என்று ஆசீர்வாதம் தெரிவித்தார்.
முதல்வர் விஜயிடம் வைக்கப்பட்ட 3 முக்கிய கோரிக்கைகள்
மக்கள் கண்காணிப்பகம் சார்பில் முதலமைச்சர் விஜயிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
முதலாவது, காவல் சித்திரவதை மரணங்கள் தொடர்பான வழக்குகளுக்கு விசேஷ நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்றும், தேவையான இடங்களில் Special Investigation Team (SIT) அமைத்து விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இரண்டாவது, காவல் சித்திரவதையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்க வேண்டும் என கூறப்பட்டது. திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய ரூ.32.5 லட்சம் நஷ்டஈடு, நிலம் மற்றும் அரசு வேலை போன்ற தரநிலைகளை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மூன்றாவது, SC/ST சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைவுபடுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு Compensation, Pension உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் காவல் சித்திரவதை தடுப்பு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் 16 உயிரிழப்புகள் குறித்து முக்கிய வலியுறுத்தல்
அடுத்த வாரம் மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எட்டாவது ஆண்டு நினைவு தினம் வரவிருப்பதை ஒட்டி, மக்கள் கண்காணிப்பகம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது.
“பலர் 13 உயிரிழப்புகள் என்று கூறினாலும், முழுமையான எண்ணிக்கை 16” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஜஸ்டிஸ் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய முழு நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மீதமுள்ள ரூ.10 லட்சம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அதேபோல், அந்த அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள 21 IAS, IPS அதிகாரிகள் மற்றும் தாசில்தார்கள் மீது நிலுவையில் உள்ள துறை ரீதியான நடவடிக்கைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனுடன், 100 போராட்டக்காரர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
“நம்பிக்கை கொடுத்த விஜய், அதை நிரூபிக்க வேண்டிய தருணம் இது”
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஹென்றி டிபேன், “நாங்கள் நடிகர் விஜயை வைத்து எதிர்பார்ப்பு வைக்கவில்லை. மனித உரிமை பார்வையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் மூன்று மணி நேரம் அமர்ந்து கண்ணீர் சிந்திய ஒருவரிடம் தான் நம்பிக்கை வைக்கிறோம்” என்றார்.
மேலும், “அந்த 20 குடும்பங்களுக்கு அவர் கொடுத்த நம்பிக்கை உண்மையானதாக மாற வேண்டுமெனில், மே 22ஆம் தேதி முக்கிய அறிவிப்புகள் வெளியாக வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.








