குலசேகரபட்டினம், ஜூன் 4: திருச்செந்தூர் அருகே புகழ்பெற்ற குலசேகரபட்டினத்தில் நிலவி வரும் பல்வேறு மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் இணைந்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் முக்கியப் பகுதியாக குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மற்றும் சாதாரண நாட்களில் அதிகரித்து வரும் பக்தர்களின் வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டு கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 9 ஏக்கர் அரசு நிலத்தை ஒரு வார காலத்திற்குள் தூய்மைப்படுத்தி ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்தும் வசதியாக மாற்றுவதற்கு அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக குலசேகரபட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நீண்ட கால கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.குலசேகரபட்டினம் பகுதிக்கு என புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக நிறுத்துவதற்குப் போதிய பார்க்கிங் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரதானமாக முன்வைக்கப்பட்டன.
also read : நெல்லை: கொள்ளை,போக்சோ வழக்குகளில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
மேலும் குலசேகரபட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தொடர்ந்து தங்கிப் பணியாற்றுவதில்லை என்றும் ஒரு நாளின் சில மணி நேரங்கள் மட்டுமே அவர்கள் வந்து செல்வதால் அவசர சிகிச்சை மற்றும் அன்றாட மருத்துவத் தேவைகளுக்காக வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை மனுக்களாகப் பெற்றுக் கொண்ட அனிதா ராதாகிருஷ்ணன் உடனடியாக அங்கிருந்தபடியே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகளைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு விளக்கம் கோரினார்.மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எவ்வித தாமதமும் இன்றி உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அவர் தேவையான அதிகாரிகளை உடனடியாக நேரில் வரவழைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து குலசேகரபட்டினம் கடற்கரைப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடல் அரிப்பு மற்றும் அதனால் கடற்கரையோரம் உள்ள பனை மரங்கள் வேரோடு சாய்ந்து அழியும் நிலை குறித்து பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.புகாரைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதிக்கு நேரடியாகச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன் கடல் அரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.பாதிக்கப்பட்ட பனை மரங்களுக்கு மாற்றாக அப்பகுதியில் புதிய மரங்களை நடுவதற்கு உடன்குடி அனல்மின் நிலையத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) பயன்படுத்தப்படும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
அதைத் தொடர்ந்து முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான சுமார் 9 ஏக்கர் பரப்பளவிலான நிலப்பகுதி கடற்கரைக்கு அருகில் இருப்பதை பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.அந்த இடத்தை நேரில் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் நிலத்தின் தற்போதைய நிலவரம் குறித்துக் கேட்டறிவதற்காகத் திருச்செந்தூர் கோவில் செயல் அலுவலரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார்.எனினும் அவரது தொலைபேசி எண் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்ததால் உடனே மற்றொரு உயர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு அந்த நிலத்தின் தற்போதைய சட்டபூர்வ நிலை குறித்து விரிவான விளக்கம் கேட்டறிந்தார்.
அந்த 9 ஏக்கர் நிலத்தை உடனடியாகத் தூய்மைப்படுத்தி தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு இன்னும் ஒரு வார காலத்திற்குள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.இதன் மூலம் குலசேகரபட்டினத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான வாகனங்களை எவ்வித போக்குவரத்து நெரிசலும் இன்றி முறையாக நிறுத்துவதற்கான அரசுப் பார்க்கிங் வசதி மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆய்வின் போது உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.








