சென்னை, ஜூன் 9: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையால் தேடப்படும் நபர் நான் அல்ல என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அவதூறு பரப்பும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் (IT Wing) மற்றும் யூடியூபர் மாரிதாஸ் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லீமா ரோஸின் சகோதரரான ஜான் பிரிட்டோ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை ராமாபுரம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (DRI) தாக்கல் செய்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.முன்னதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி அதிகாலையில், மன்னார் வளைகுடா பகுதியில் வருவாய் புலனாய்வுப் பிரிவினரும் கடலோரக் காவல் படையும் இணைந்து நடத்திய கூட்டு ஆபரேஷனில் நாட்டுப் படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.இலங்கைக்குக் கடத்த முயன்ற, சர்வதேச சந்தையில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 99 கிலோ ஹாஷிஷ் போதைப்பொருள் அதிலிருந்து கைப்பற்றப்பட்டது.
Also read: அதிமுக கொறடா உத்தரவை மீறிய விவகாரம்: 21 எம்.எல்.ஏ.க்களை மன்னித்த சபாநாயகர்; 4 பேர் மீது நடவடிக்கை?
இதனைத் தொடர்ந்து, மதுரையிலிருந்து ரயில் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுரை ரயில் நிலையத்தில் பிலோமின் பிரகாஷ் என்பவரைப் பிடித்துப் போலீஸார் சோதனை நடத்தினர்.அவரிடமிருந்து சர்வதேச சந்தையில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 38 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த இரு பெரும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுக்கும் ஜான் பிரிட்டோ என்ற பெயருடைய நபர் ஒருவரே மூளையாகச் செயல்பட்டது அமலாக்கத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.தற்போது இந்த ஜான் பிரிட்டோ என்ற பெயரே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையால் தேடப்பட்டு வரும் அந்த ஜான் பிரிட்டோ, தமிழ்நாடு அரசின் துறைமுகங்கள், சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் நெருங்கிய உறவினரான ஆதவ் அர்ஜுனாவின் உறவினரும், லீமா ரோஸின் சகோதரருமான ஜான் பிரிட்டோதான் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் சமூக வலைத்தளப் பக்கங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாகப் பதிவிடத் தொடங்கினர்.திமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில், “ஜான் பிரிட்டோ தற்போதைய திமுக அரசின் துறைமுகங்கள், சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவின் நெருங்கிய உறவினர் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை” என்று குறிப்பிட்டு டெக்ஸ்ட் பதிவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவும் இந்தப் பதிவுகளுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று லீமா ரோஸின் சகோதரரான ஜான் பிரிட்டோ இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமலாக்கத்துறையால் தேடப்படும் அல்லது கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஜான் பிரிட்டோ வேறு நபர், தான் வேறு நபர் என்று விளக்கமளித்தார்.’நான் அவன் இல்லை’ திரைப்பட பாணியில், தேடப்படும் குற்றவாளி நான் கிடையாது என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது இத்தகைய பொய்யான புகார்களும் வதந்திகளும் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
திமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் தவறான தகவலைப் பதிவிட்டு, தனது பெயருக்கும் தனது குடும்பத்தினரின் பெயருக்கும் பெரும் களங்கத்தை விளைவித்துள்ளதாகவும், இதனால் தானும் தனது குடும்பத்தினரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.மேலும், திமுக ஐடி விங் நிர்வாகிகள் மட்டுமன்றி, சமூக வலைத்தளப் பக்கங்களில் தன்னைப்பற்றித் தொடர்ச்சியாக அவதூறு பேசி வரும் யூடியூபர் மாரிதாஸ் என்பவரின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகார் மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தன்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பி வரும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜான் பிரிட்டோ சென்னை காவல் ஆணையரகத்தில் வலியுறுத்தியுள்ளார்.இதையடுத்து, ஜான் பிரிட்டோ அளித்த புகார் மனுவை உடனடியாகப் பெற்றுக்கொண்ட காவல் உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அவதூறு புகார்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்து, வதந்தி பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.








