நெல்லை , ஜூன் 10 : நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் புதன்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் சாமர்த்தியமான செயல்பாட்டினால் ஒரு பெரும் உயிர்ச்சேதம் மற்றும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மருத்துவ மையமாக விளங்குவது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் நாள்தோறும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததைக் கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஏழு மாடி பல்நோக்கு மருத்துவமனை வளாகம் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக்) கட்டப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த ஏழு அடுக்கு மாடி கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் தீவிர இருதய சிகிச்சை பிரிவு (ICC) செயல்பட்டு வருகிறது. இங்கு மாரடைப்பு மற்றும் கடுமையான இதய நோய்களால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தனர். வழக்கம் போல புதன்கிழமை மதிய வேளையில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நோயாளிகளுக்குச் செல்லும் ஆக்சிஜன் விநியோகக் குழாயில் (Oxygen Pipeline) திடீரென தீப்பிடித்தது.
Also : நெல்லை ரயில் நிலைய 6-வது நடைமேடை ஜூலையில் திறப்பு: அதிகாரிகள் ஆய்வு
குழாயில் இருந்து கரும்புகையுடன் தீப்பொறி கிளம்பியதைக் கண்ட வார்டில் இருந்த நோயாளிகள், செவிலியர்கள் மற்றும் அங்கிருந்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவசர காலப் பகுதியில் என்ன செய்வது என்று மருத்துவப் பணியாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் அந்த சில நொடிகளுக்குள் வார்டுக்கு வெளியே வளாகத்தில் அமர்ந்திருந்த நோயாளிகளின் உறவினர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு உடனடியாகச் செயல்பட்டனர்.
அவர்கள் சிறிதும் தாமதிக்காமல் அந்தப் பிரிவுக்குச் செல்லும் பிரதான மின் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Main Switch Board) மின் இணைப்பை உடனடியாகத் துண்டித்தனர். மின்சாரம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தீ மேலும் பரவாமல் தற்காலிகமாகக் கட்டுக்குள் வந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த நவீன தீயணைப்புக் கருவிகளைக் (Fire Extinguishers) கொண்டு வந்து ஆக்சிஜன் குழாயில் எரிந்து கொண்டிருந்த தீயை உடனடியாக அணைத்தனர்.
சம்பவம் நடந்த உடனே தீவிர இருதய சிகிச்சை பிரிவில் இருந்த அனைத்து நோயாளிகளும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாகப் பக்கத்தில் உள்ள மற்றொரு அவசரச் சிகிச்சை வார்டுக்குப் பத்திரமாக மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் வசதிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் தடையின்றி வழங்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து நெல்லை அரசு மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அதிகாரி (RMO) டாக்டர் எஸ்தர் அவர்களிடம் கேட்டபோது தீ விபத்து ஏற்பட்ட உடனே மருத்துவமனை நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். “தீ விபத்து நேரிட்ட சில நிமிடங்களிலேயே நோயாளிகள் அனைவரும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி பத்திரமாக அடுத்த வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டனர். அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போதைக்கு யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை” என்று அவர் உறுதியளித்தார்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்துப் பேசிய அவர், மருத்துவமனையின் பொதுப்பணித்துறை மின்சாரப் பிரிவு (PWD Electrical Wing) ஊழியர்கள் விபத்து நடந்த இருதய சிகிச்சை பிரிவில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறினார். ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவோ அல்லது மின் கசிவு காரணமாகவோ இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்தும், விபத்து நடந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அவசரக்கால நடவடிக்கைகள் குறித்தும் துறை ரீதியான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டாக்டர் எஸ்தர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் நேரிட்ட இந்த திடீர் தீ விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும் பொதுமக்களின் சாமர்த்தியமும் மருத்துவமனை ஊழியர்களின் ஒருங்கிணைந்த வேகமான செயல்பாடும் ஒரு மிகப்பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்த்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.








