
Chennai , May 12 : தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜயின் செயல்பாடுகளை சிபிஐ ராமச்சந்திரன் பாராட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் டி. ராமச்சந்திரன் நிகழ்த்திய உரை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, முதல்வர் விஜயின் அரசியல் அணுகுமுறை, எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற விதம், மற்றும் பதவியேற்ற உடனேயே எடுத்த நிர்வாக முடிவுகள் குறித்து அவர் வெளிப்படையாக பாராட்டியிருப்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
17வது தமிழக சட்டப்பேரவையில் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பேரவை தலைவர் மற்றும் துணை பேரவை தலைவருக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தார் டி. ராமச்சந்திரன். தனது உரையில் அவர், “ஜனநாயகத்தின் இதயமாக சட்டமன்றம் திகழ்கிறது” என்று குறிப்பிட்டதுடன், சட்டமன்றம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்ற பார்வையை தாண்டி நடுநிலையுடன் இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கும் போதிய நேரம் வழங்கி விவாதங்களை சமநிலையுடன் நடத்த வேண்டும் என்ற அவரது கருத்து, சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்த முக்கிய அரசியல் பார்வையாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மாநில உரிமைகள், சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையை இந்த அவை தொடர்ந்து காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவரது உரையின் முக்கியமான பகுதி முதல்வர் விஜயை பற்றிய பாராட்டுகளாக அமைந்தது. “இன்றைக்கு முதலமைச்சருடைய செயல்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டையும் பாராட்டும் வகையில் இருக்கிறது” என்று கூறிய டி. ராமச்சந்திரன், தமிழக அரசியலில் நீண்ட காலமாக இருந்து வந்த கடுமையான அரசியல் மோதல் சூழலை உடைக்கும் முயற்சியை விஜய் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்களில் ஒன்று, தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வர் விஜய் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சம்பவமாகும். இதனை அவர் 1967ஆம் ஆண்டு அண்ணா வெற்றி பெற்றபின் காமராஜரை சந்தித்த அரசியல் மரபுடன் ஒப்பிட்டார்.
தனது உரையில் டி. ராமச்சந்திரன் குறிப்பிட்ட அரசியல் சந்திப்புகள் தற்போது சமூக வலைதளங்களிலும் விவாதமாகி வருகின்றன. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்வர் விஜய் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்தது, மதிமுக தலைவர் வைகோவை சந்தித்தது, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியை சந்தித்தது போன்றவை தமிழக அரசியலில் மரியாதை சார்ந்த புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இடதுசாரி தலைவர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்க மாற்றமாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சேர்ந்து “தமிழ்நாட்டில் புதிய அரசியல் சரித்திரத்தை உருவாக்கும் முயற்சி” என்று அவர் விவரித்தது பேரவையில் கவனத்தை ஈர்த்தது.
பதவியேற்ற உடனேயே கையெழுத்திட்ட 3 முக்கிய கோப்புகள்
முதல்வர் விஜய் பதவியேற்ற அதே மேடையில் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும், அது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதாகவும் டி. ராமச்சந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார். அதில் முக்கியமாக:
- பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக “சிங்கப்பெண் படை” அமைக்கும் திட்டம்
- இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்கும் நடவடிக்கைகள்
200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்
போன்ற அறிவிப்புகள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.குறிப்பாக, இளைஞர்கள் போதைப்பொருள் பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதனை தடுக்கும் நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் காத்திருக்கிறார்கள்”
தனது உரையின் இறுதியில், தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று டி. ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக மக்கள் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசை நோக்கி காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், அரசியல் வேறுபாடுகளை தாண்டி பாராட்டு தெரிவிக்கும் அரசியல் கலாச்சாரம் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்ற மறைமுக அரசியல் செய்தியும் அவரது உரையில் வெளிப்பட்டது








