திருவண்ணாமலை : செய்யாறு அருகே உணர்ச்சிப் பெருக்குடன் நடந்த துரியோதனன் படுகளம்: திரௌபதி சபதம் நிறைவேறியதைக் கண்டு உறைந்து நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
வெம்பாக்கம்: மகாபாரதப் போரின் இறுதிப் பக்கங்கள் அப்படியே கண் முன்னே விரிந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு மெிரட்டலான, உணர்வுப்பூர்வமான காட்சியைத் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட நெடுங்கல் கிராம மக்கள் இன்று நேரில் கண்டு மெய்சிலிர்த்தனர். நெடுங்கல் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயத்தின் சித்திரை மாத அக்னி வசந்தோற்சவ திருவிழாவின் 19-ஆம் நாள் நிகழ்வாக, மகாபாரதத்தின் உச்சக்கட்டமான ‘துரியோதனன் படுகளம்’ நிகழ்ச்சி இன்று அக்ரகார மைதானத்தில் வெகு விமரிசையாகவும், தத்ரூபமாகவும் நடைபெற்றது.

திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகள், உள்ளூர் விவகாரங்கள் என எத்தனையோ ஓட்டங்களுக்கு மத்தியிலும், கிராமத்து மண்ணின் பாரம்பரியமும் ஆன்மீகமும் சற்றும் குறையாமல் இந்த விழா அரங்கேறியுள்ளது.
நெடுங்கல் திரௌபதி அம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா தொடங்கி கடந்த 18 நாட்களாக மகாபாரத சொற்பொழிவுகளும், கூத்துகளும் என கிராமமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. இதன் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் இன்று மதியம் நடைபெற்றது. இதற்காக, கோயில் எதிரே உள்ள பரந்த மைதானத்தில் கூத்து கலைஞர்கள் மற்றும் ஊர் பெரியவர்களின் மேற்பார்வையில், பல அடி நீளத்தில் பிரம்மாண்டமான துரியோதனனின் உருவம் களிமண்ணால் வடிக்கப்பட்டிருந்தது.
மண்ணில் படுத்திருக்கும் நிலையிலான அந்த உருவத்தின் பிரம்மாண்டமும், அதன் உருண்டைக் கண்களும், கோபத்தால் துருத்திக் கொண்டிருக்கும் நாக்கும் துரியோதனனின் போர்க்கால வீரியத்தையும், அகங்காரத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தியது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நெடுங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பிரம்மாண்ட உருவத்தைச் சுற்றி அரணாகக் கூடி நின்றனர்.
மதியம் 2 மணியளவில், போர்க்களக் கூத்து தொடங்கியது. பாரம்பரிய தெருக்கூத்து கலைஞர்கள் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்து மைதானத்திற்குள் நுழைந்தபோதே கூட்டத்தில் பலத்த ஆரவாரம் எழுந்தது. கைகளில் கதாயுதம் ஏந்தி, ஆக்ரோஷமாக முழங்கியபடி பீமன் வலம் வர, அவரிடமிருந்து தப்பித்து ஓடும் துரியோதனனின் உடல்மொழியும் வசனங்களும் நிஜப் போர்க்களத்தை மக்கள் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தின.
ஆவேசமாகத் துரத்தும் பீமனின் கதாயுதத்திற்குப் பயந்து, உயிர் பிழைக்கும் வேட்கையோடு மைதானத்தில் வடிக்கப்பட்டிருந்த மண்ணாலான துரியோதனன் உருவத்தை மூன்று முறை சுழன்று சுழன்று ஓடினார் துரியோதனன் வேடமிட்ட கலைஞர். இறுதியாக, துரியோதனனின் தொடைப் பகுதியை பீமன் தனது கதாயுதத்தால் அடித்துப் பிளக்கும் காட்சி அரங்கேறியது. அப்போது, துரியோதனன் உருவத்தின் தொடைப் பகுதியிலிருந்து ‘குருதி’யெனப் பீறிட்டுத் தெறித்த செந்நிறத் திரவத்தைக் கண்டு அங்கிருந்த பெண்கள் பக்திப் பெருக்குடன் அம்மனை வேண்டினர்.
மகாபாரதக் கதையின்படி, துரியோதனனின் இரத்தத்தை எடுத்து, அதுவரை தலைவிரிகோலமாக இருந்த திரௌபதி அம்மனின் கூந்தலில் பூசி, கூந்தலை முடிந்து சபதம் நிறைவேறியதை அறிவிக்கும் காட்சி நடந்தபோது மைதானமே பக்தி கோஷங்களால் அதிர்ந்தது. திரௌபதி வேடமிட்ட கலைஞர் ஆவேசமாக வலம் வந்த காட்சி பார்ப்பவர்களை மெிரள வைத்தது.
இதனைத் தொடர்ந்து, விழாவின் மிக உருக்கமான, மனித உணர்வுகளை உலுக்கும் பகுதியாக ‘காந்தாரி புலம்பல்’ காட்சி தொடங்கியது. நூறு பிள்ளைகளை இழந்து, தன் இறுதி மகனான துரியோதனனும் மாண்டுவிட்டான் என்ற செய்தி கேட்டு, பதறியடித்து ஓடிவரும் தாய் காந்தாரியின் வேடம் அனைவரையும் நெகிழச் செய்தது. கைகளில் முறத்தோடும், துடைப்பத்தோடும் அழுதுகொண்டே ஓடிவந்த காந்தாரி, மண்ணில் கிடந்த மகனின் உருவத்தின் மீது ஏறி நின்று, மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்த காட்சி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
சோகத்தின் உச்சிக்கே சென்ற காந்தாரி, தன் மகனின் மரணத்திற்குக் காரணமான உலகத்தின் மீதுள்ள கோபத்தில், அங்கு கூடி நின்றிருந்த கிராமத்து இளைஞர்களைத் துடைப்பத்தால் அடித்து விரட்டிவிட்டு, மீண்டும் தன் மகனின் உடலின் மீது விழுந்து அழுத காட்சி, வெறும் கூத்தாக இல்லாமல் ஒரு தாயின் கதறலாகவே அங்கு நின்றவர்களால் உணரப்பட்டது.
“வருஷா வருஷம் இந்த படுகளத்தைப் பார்த்தாலும், இந்த வருஷம் கலைஞர்கள் நடிச்ச விதம் நிஜமாவே மகாபாரத காலத்துக்கே எங்களைக் கூட்டிட்டுப் போயிடுச்சு. காந்தாரி அழுதப்போ எங்களையும் அறியாம கண்ணுல தண்ணி வந்துடுச்சு” என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் விழாவைக் காண வந்திருந்த நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.
பாரம்பரிய கலைகளும், கிராமத்து ஆன்மீக நம்பிக்கைகளும் இன்னும் எவ்வளவு உயிர்ப்போடு இருக்கின்றன என்பதற்குச் சான்றாக இந்த துரியோதனன் படுகள நிகழ்ச்சி அமைந்திருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில் தர்மகர்த்தாக்கள், விழா குழுவினர் மற்றும் நெடுங்கல் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க உள்ளூர் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.








