
Delhi ,May 19: சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக,நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 15ஆம் தேதி மத்திய அரசு எரிபொருள் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய நிலையில்,அதற்கு அடுத்த ஐந்தே நாட்களில் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளன.புதிய விலை மாற்றத்தின்படி,பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும்,டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டு,இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த திடீர் விலை உயர்வால்,சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104 ரூபாய் 54 காசுகளுக்கும்,டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 05 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில வாரங்களாக எந்தவித மாற்றமும் இன்றி ஒரே நிலையில் நீடித்து வந்த எரிபொருள் விலை,தற்போது தொடர்ச்சியாக உயரத் தொடங்கியிருப்பது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடையே கடுமையான நிதி நெருக்கடியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னை மட்டுமன்றி,நாட்டின் பிற முக்கிய பெருநகரங்களிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது.அதன்படி,புதுடெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 64 காசுகளாகவும்,மும்பையில் 107 ரூபாய் 59 காசுகளாகவும்,கொல்கத்தாவில் அதிகபட்சமாக 109 ரூபாய் 70 காசுகளாகவும் உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு இத்துடன் நிறைவடையப் போவதில்லை என்றும்,வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு மேலும் 25 ரூபாய் வரை உயரக்கூடும் என்றும் சர்வதேச நிதி சேவை நிறுவனமான நெமூரா தனது சமீபத்திய ஆய்வு அறிக்கையில் எச்சரித்துள்ளது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்,பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது சந்தித்து வரும் கடுமையான வருவாய் இழப்பை ஈடுகட்ட வேண்டுமானால்,இந்த அளவிலான விலை உயர்வு அவசியமாகிறது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நெமூரா மற்றும் எலாரா கேப்பிடல் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த கூட்டு ஆய்வு அறிக்கையின் தரவுகளின்படி,பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு (LPG) ஆகியவற்றை தற்போதைய மானிய விலையில் விற்பனை செய்வதன் மூலம் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி 1,380 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.குறிப்பாக,சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 420 ரூபாய் முதல் 670 ரூபாய் வரை நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதால்,எல்பிஜி விற்பனையில் மட்டுமே தினமும் 200 கோடி முதல் 400 கோடி ரூபாய் வரை இழப்பு நீடிக்கிறது.இதனுடன் விமான எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாததால்,எண்ணெய் நிறுவனங்கள் மீதான நிதி அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனங்களில்,இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மிக மோசமான நிதி நிலையை எதிர்கொண்டு வருகிறது.அதன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனைக் காட்டிலும்,சில்லறை விற்பனைச் சந்தையில் அதிக பங்கைக் கொண்டுள்ளதால்,அந்நிறுவனத்திற்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு 19 டாலர் வீதம் இழப்பு ஏற்படுகிறது.மறுபுறம்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வலுவான டீசல் உற்பத்தித் திறனைக் கொண்டிருப்பதாலும்,சில்லறை விற்பனைப் பங்கு குறைவாக இருப்பதாலும் பேரலுக்கு 4 டாலர் இழப்புடன் ஓரளவு சாதகமான நிலையில் உள்ளது.இவ்வளவு பெரிய நிதி நஷ்டத்தை நிறுவனங்கள் எதிர்கொண்ட போதிலும்,பங்குச் சந்தையில் இந்த எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் (OMC) பங்குகள் இன்னும் பிரீமியம் விலையிலேயே வர்த்தகமாகி வருவது சந்தை வல்லுநர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு சர்வதேச அரசியல் சூழலே முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வெடித்த ராணுவ மோதல்,உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் முடக்கத்தை ஏற்படுத்தியது.உலகின் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையாகக் கருதப்படும் ‘ஹார்மோஸ் நீரிணை’ பகுதியை ஈரான் முடக்கியதால்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு அதன் விலை கடுமையாக உயர்ந்தது.இந்த நெருக்கடியான சூழலைச் சமாளிக்கவும்,உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்தியா,ரஷ்யா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளிடமிருந்து கூடுதல் பிரீமியம் தொகையைக் கொடுத்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
அதே நேரத்தில்,நாட்டின் ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால்,கடந்த 11 வாரங்களாக உள்நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்தாமல் மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகப் பொருளாதார மற்றும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பொதுமக்களின் அதிருப்தியைத் தவிர்க்கும் நோக்கில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விலை உயர்வு,தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது எண்ணெய் நிறுவனங்களால் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு தீவிரமடைந்து வருவதை உணர்த்தும் வகையில்,பிரதமர் நரேந்திர மோடியும் சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.பொதுமக்கள் அனைவரும் தங்களது அன்றாடத் தேவைகளில் எரிபொருளை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர்,பெருநிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குக் கொரோனா பேரிடர் காலத்தைப் போல மீண்டும் வீட்டிலிருந்தே பணிபுரியும் ‘ஒர்க் ஃபிரைம் ஹோம்’ வாய்ப்புகளை வழங்கப் பரிசீலிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.பிரதமரின் இந்த அதிகாரப்பூர்வப் பேச்சு தற்போதைய கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
திரவ எரிபொருட்களின் விலை உயர்வு ஒருபுறமிருக்க,அதன் தொடர்ச்சியாக அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் (CNG) விலையும் கிலோவுக்கு 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை மாற்றத்தால் ஐஜிஎல் (IGL) மற்றும் எம்ஜிஎல் (MGL) போன்ற இயற்கை எரிவாயு விநியோக நிறுவனங்களின் வருவாய் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை இதே நிலையிலேயே நீடித்தால்,கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரின் போது அரசு கையாண்ட அதே வழிமுறையை இப்போதும் பின்பற்ற நேரிடும் என சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.அந்த காலகட்டத்தில் தினசரி சில காசுகள் வீதம் பெட்ரோல்,டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டது போல,இந்தியாவிலும் வரும் வாரங்களில் தினசரி விலை மாற்றம் முறையில் விலையேற்றம் தொடரக்கூடும்.இதனால்,வரும் நாட்களில் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது.








