
சென்னை , மே 15:CM விஜய்யை சந்தித்த இயக்குனர் விக்ரமன், பெப்சி தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் சின்ன படங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு திரைத்துறை பிரபலங்களை தொடர்ந்து சந்தித்து வரும் CM விஜய்யை, இயக்குனர் விக்ரமன் தனது மகனுடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் விக்ரமன், விஜய்யின் எளிமை, நட்புணர்வு மற்றும் திரைத்துறைக்கான அணுகுமுறை குறித்து மிகுந்த நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்தார்.
CM விஜய்யை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்த விக்ரமன், “இப்போதுதான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். நானும் என் மகனும் சென்றிருந்தோம். அவர் ஒரு முதலமைச்சர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் மிகவும் சாதாரணமாகவும் நட்புணர்வோடும் பேசினார்” என்று கூறினார்.
மேலும், “கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் நான் எப்படி பழகினேனோ, அதே மாதிரி தான் இன்றும் பேசினார். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. உண்மையிலேயே கண் கலங்கிவிட்டது. அவர் என்னிடம் ‘நான் எப்போதும் உங்க விஜய்தான்… உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்’ என்று கூறினார்” என விக்ரமன் தெரிவித்தார்.
திரைத்துறைக்காகவே கோரிக்கைகள் வைத்தேன்
தனிப்பட்ட முறையில் எந்த முதல்வரிடமும் இதுவரை எந்த கோரிக்கையும் வைத்ததில்லை என்றும், எப்போதும் திரைப்படத் துறையின் நலனுக்காக மட்டுமே பேசியிருப்பதாகவும் விக்ரமன் கூறினார். அதேபோல், CM விஜய்யை சந்தித்த முதல்நாளிலேயே திரைத்துறையை சார்ந்த பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்தார்.
அதில் முக்கியமாக, திரைப்படத் துறையில் பணிபுரியும் பெப்சி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி குறித்து வலியுறுத்தியதாக கூறினார். “முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் பெப்சி தொழிலாளர்களுக்காக பையனூரில் 105 ஏக்கருக்கும் மேல் நிலம் வழங்கியிருந்தார். ஆனால் பொருளாதார வசதி இல்லாததால் பல தொழிலாளர்களால் வீடுகள் கட்ட முடியவில்லை. அதனால் அரசாங்கமே முன்வந்து அவர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்” என்றார்.
2500 உதவி இயக்குனர்களுக்காக 50 ஏக்கர் கோரிக்கை
இயக்குனர் சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான உதவி இயக்குனர்களின் வாழ்க்கை நிலை குறித்து பேசும்போது விக்ரமன் உணர்ச்சிவசப்பட்டார். “இன்றைக்கு சுமார் 2500 உதவி இயக்குனர்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் அல்லது செங்கல்பட்டு பகுதியில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கி, உதவி இயக்குனர்களுக்கான தனி குடியிருப்பு அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என்று கூறினார்.
திரைப்படத் துறையில் நீண்ட காலமாக இருந்து வரும் பலருக்கும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது என்றும், இந்த கோரிக்கைகள் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கத்தில்தான் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சின்ன படங்களுக்கு விடிவு காலம் வருமா?
தமிழ் சினிமாவில் தற்போது பெரிய படங்கள் மட்டுமே அதிக திரையிடலைப் பெறுகின்றன என்ற விவாதம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், சின்ன படங்களுக்கு உரிய திரையிடல் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விக்ரமன் முன்வைத்தார்.
“மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உட்பட எல்லா தியேட்டர்களிலும் சின்ன படங்களுக்கு சரியான ஸ்கிரீன் ஒதுக்க வேண்டும் என்று கேட்டேன். நல்ல உள்ளடக்கம் கொண்ட சிறிய படங்கள் மக்களிடம் செல்ல வழி செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த கோரிக்கைகளை கேட்ட CM விஜய் உடனடியாக தனது உதவியாளர் ஜெகதீஷை அழைத்து, “சார் சொன்ன கோரிக்கைகள் எல்லாம் எழுதிக்கொள்ளுங்கள். நம்மால் செயல்படுத்த முடிந்ததை கண்டிப்பாக செய்வோம்” என்று கூறியதாகவும் விக்ரமன் பகிர்ந்தார்.
இதனால், “சின்ன படங்களுக்கு ஒரு விடிவு காலம் ஆரம்பமாகி இருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
விஜய்யின் நட்புணர்வை பகிர்ந்த விக்ரமன்
சந்திப்பின் போது தனது மகனை பார்த்ததும் விஜய் உடனே அடையாளம் கண்டுகொண்டு மிகவும் அன்பாக பேசியதாகவும் விக்ரமன் கூறினார்.
“என் மகனின் முதல் படம் ‘ஹிட்லிஸ்ட்’ படத்துக்காக வாழ்த்து வாங்க அவரை GOAT படப்பிடிப்புக்கு கூட்டிச் சென்றிருந்தேன். அப்போது விஜய் அவனை பார்த்து ‘ப்ரோ… நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க ப்ரோ’ என்று இரண்டு முறை சொன்னார். அந்த தருணம் எங்களுக்கு மறக்க முடியாதது” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும், “என் வீட்டின் ஹாலில் தற்போது இருக்கும் ஒரே சினிமா புகைப்படம் என் மகனும் விஜய் சாரும் சேர்ந்து எடுத்த புகைப்படம்தான். பல முன்னாள் முதலமைச்சர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஆனால் அந்த புகைப்படம் மட்டும் எனக்கு மிகவும் ஸ்பெஷல்” என்றும் அவர் கூறினார்.
திரைத்துறைக்கு நல்லது செய்ய வேண்டும்
பேட்டியின் இறுதியில், “முதல்வர் திரைத்துறைக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். மீண்டும் அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று விக்ரமன் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.












