
Erode property dispute , May 11 : 4 கோடி மதிப்பிலான சொத்து, நகை, பணம் பறிபோனதாக மூதாட்டி சாமியாத்தா கண்ணீருடன் குற்றச்சாட்டு முன்வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | 4 கோடி சொத்து மோசடி
ஈரோடு மாவட்டத்தில் குடும்ப சொத்து பிரச்சினை தொடர்பாக மூதாட்டி ஒருவர் கண்ணீருடன் வெளியிட்ட குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “4 கோடி, 5 கோடி மதிப்பிலான சொத்துகள் போய்விட்டது.. இன்று நான் கடன் வாங்கி வாழ்கிறேன்” என்று சாமியாத்தா என்ற மூதாட்டி உருக்கமாக கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Also Read : “அரசியல் வேறு.. மனிதநேயம் வேறு”.. தலைவர்களுடன் விஜய் நடத்திய சந்திப்புகள் சொல்வது என்ன?
தனது குடும்பத்தினரால் ஏமாற்றப்பட்டதாக கூறும் அந்த மூதாட்டி, குறிப்பாக தங்கை மற்றும் அவரது குடும்பத்தினர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சொத்து பங்கீடு, பணம், நகை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பாக ஏற்பட்ட இந்த விவகாரம் தற்போது உள்ளூர் மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
“என் பேரு சாமியாத்தா” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த மூதாட்டி, தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் நம்பிக்கையை பயன்படுத்தி அனைத்து சொத்துகளையும் கைப்பற்றியதாக கூறுகிறார். அவரது பேச்சில், “எங்க தங்கச்சி, அம்மா இறந்த பிறகு இங்க வந்து கைஎழுத்து போடு, அது போடு என்று சொல்லி ஏமாத்திட்டாங்க. வீட்டில் இருந்த பத்திரங்கள், பணம், நகை எல்லாத்தையும் தூக்கிட்டு போயிட்டாங்க” என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், “நான் ஆசரிச்ச அளவுக்கு இன்று கடன் வாங்கி பிழைக்கிறேன். எனக்கு உரிய பங்கையும் தர மாட்டாங்க” என்று கூறிய அவர், தற்போது வாழ்க்கையை நடத்த கூட சிரமப்படுவதாக தெரிவித்தார்.
“5 கோடிக்கு மேல் சொத்து” என்ற அதிர்ச்சி தகவல்
இந்த விவகாரத்தில் பேசும்போது, சம்பந்தப்பட்ட சொத்து மதிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாலு கோடி, ஐந்து கோடிக்கு மேல வரும்” என்று சாமியாத்தா கூறினார். சாமியாத்தா தனது பிரச்சினை குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்ததாக கூறியுள்ளார். ஆனால், “புகார் கொடுத்தாலும் ஒத்து வர மாட்டேங்கிறாங்க” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
அவர் கூறியதன்படி, கரும்பு வயல் தொடர்பான பிரச்சினையும் இதில் இணைந்துள்ளதாக தெரிகிறது. “கரும்பு வெட்டுங்கன்னு சொல்றாங்க. போலீஸ் கூட வந்து வெட்டி தர்றோம் என்று சொல்றாங்க. ஆனா நாங்க வெட்ட முடியல” என்று அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மிக முக்கியமாக கவனம் ஈர்த்தது மிரட்டல் குற்றச்சாட்டு. “கையெழுத்து போட்டு கொடு என்று மிரட்டுறாங்க” என்று சாமியாத்தா வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார்.
தனது இறுதி கோரிக்கையை கூறும்போது, சாமியாத்தா மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். “எனக்கு வந்து இந்த பங்கு பாதி பங்கி விட்டறணும். எனக்கு உரிய பங்கு வாங்கி கொடுக்கணும்” என்று அவர் கேட்டுக் கொண்டார். அவரது குரலில் இருந்த வேதனை, இந்த விவகாரம் ஒரு சாதாரண குடும்ப சச்சரவாக இல்லாமல், வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாக மாறியிருப்பதை காட்டுகிறது.








