
சென்னை, May 7 : தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், புதிய அரசு அமைப்பதில் நீடிக்கும் இழுபறி சென்னை அரசியல் வட்டாரத்தில் வரலாறு காணாத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான உரிமை கோரல் ஆளுநர் மாளிகையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், ராஜ் பவன் இன்னும் இறுதி முடிவை அறிவிக்காமல் மௌனம் காப்பது சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பாக, தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அணியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய பிரதான கேள்வியாக மாறியுள்ளது. ஆளுநரின் தாமதத்தை எதிர்கொள்ள நீதிமன்றத்தை நாடுவதே தங்களின் அடுத்த இயல்பான வழி என்ற மனநிலைக்கு விஜய் தரப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன .
அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலத்தின் முதன்மைக் குடிமகனாக விளங்கும் ஆளுநர், அரசியல் சார்பற்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். “ஆளுநர் அலுவலகம் என்பது பொதுமக்களின் கைதட்டலுக்காகவோ அல்லது அரசியல் ஆதாயங்களுக்காகவோ அவசரப்பட்டுச் செயல்படும் இடமல்ல; அவர் தனது முடிவை தீர ஆலோசித்து எடுக்க அவகாசம் உள்ளது” என்ற வாதம் ஒருபுறம் முன்வைக்கப்பட்டாலும், இந்தத் தாமதம் மாநிலத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
தற்போதைய சூழலில் ஆளுநரின் முன்னால் இரண்டு விருப்பங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஒன்று, தற்போதைய அரசியல் சூழலை உன்னிப்பாகக் கவனித்து மேலும் சில நாட்கள் காத்திருப்பது; அல்லது ஆட்சி அமைக்கக் கோரும் விஜய் அணியின் கோரிக்கையை நிராகரிப்பது. இதில் ஆளுநர் எடுக்கும் எந்தவொரு முடிவும் தமிழக அரசியலின் போக்கைத் தலைகீழாக மாற்றக்கூடிய வல்லமை கொண்டது என்பதால், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் இப்போது கிண்டி ஆளுநர் மாளிகையை நோக்கியே திரும்பியுள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழலில், “நீதிமன்றத்தை நாடுவதே எங்களுக்கான இயல்பான வழி” என்ற கருத்து விஜய் தரப்பிலிருந்து கசிந்துள்ளது. ஆளுநர் மாளிகை தொடர்ந்து காலம் தாழ்த்தினால், சட்ட ரீதியானப் போராட்டத்தை கையில் எடுக்க விஜய் அணி தயாராகி வருகிறது. கடந்த காலங்களில் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்களின் போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு நள்ளிரவில்கூட விசாரணை நடத்திய முன்னுதாரணங்களை விஜய் தரப்பு சட்ட ஆலோசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், ஆளுநரின் தனிப்பட்ட அதிகார வரம்புகளுக்குள் நீதிமன்றம் எந்த அளவிற்குத் தலையிட முடியும் என்பதும், நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக அமையுமா என்பதும் முன்கூட்டியே கணிக்க முடியாதவை. “தீர்ப்பை இப்போதே ஊகிக்க முடியாது” என்ற போதிலும், அரசியல் சட்டத்தின் மாண்பைக் காக்க நீதிமன்றக் கதவுகளைத் தட்டுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.
மறுபுறம், தேர்தல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும், இதர கூட்டணிக் கட்சிகளும் தற்போதைய நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. “நாளை மாலைக்குள் ஆளுநர் மாளிகையிலிருந்து ஒரு நல்ல செய்தி வர வேண்டும்; இல்லையெனில் அடுத்தகட்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்த வேண்டியிருக்கும்” என்ற எதிர்பார்ப்பும் அழுத்தமும் கூட்டணிக்குள்ளும் அதிகரித்துள்ளது.





