
சென்னை, May 6 : தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் நகர்வாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழக’ தலைமை நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கட்கிழமை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூடி விவாதங்களை நடத்தியது. இந்த கூட்டத்தின் முடிவில், கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரில் செல்லக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த உயர்நிலைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் பிரின்ஸ் டிங்கர், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னதாக காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பு, எவ்வித காரணமும் இன்றி திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ஆலோசனை நீண்டு கொண்டே சென்றது, கட்சிக்குள் ஏதோ ஒரு முக்கிய முடிவு எட்டப்படுவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது.
கூட்டணி மற்றும் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து மாநில தலைமையே இறுதி முடிவை எடுத்துக் கொள்ளலாம் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை (AICC) நேற்று பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்தே இந்த அவசர நகர்வுகள் வேகமெடுத்துள்ளன. நேற்று இரவு காணொளி வாயிலாக முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்ரவர்த்தி இந்த நேரடி ஆலோசனையில் பங்கேற்றது, டெல்லி தலைமையின் நேரடி பார்வையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
தற்போது வெளியாகி வரும் நம்பகத்தகுந்த அரசியல் வட்டாரத் தகவல்களின்படி, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை விஜய்யிடம் நேரில் வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், இது தவெக உடனான முறையான கூட்டணி அறிவிப்பா அல்லது தார்மீக ஆதரவா என்பது குறித்து இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் இதுவரை வரவில்லை.
விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின், பெரிய பாரம்பரியக் கட்சி ஒன்று அவருடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்த சந்திப்பு நிகழ்ந்தால் அது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களம் மற்றும் தற்போதைய கூட்டணிக் கணக்குகளில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்
காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் வியூகம், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சமன்பாடுகளில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. புது தலைமுறை வாக்காளர்களையும், இளைஞர்களையும் இலக்காகக் கொண்டு களம் இறங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு, தேசியக் கட்சியான காங்கிரஸின் ஆதரவு கிடைப்பது அக்கட்சியின் அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்த உதவும். அதே வேளையில், காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய கூட்டணியில் தனது பேரம் பேசும் சக்தியை உயர்த்திக் கொள்ளவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறது.
ராயப்பேட்டை விடுதியில் மதிய உணவுக்குப் பின்னரும் காங்கிரஸ் நிர்வாகிகளின் விவாதம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பனையூர் நோக்கிய அவர்களின் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





