
.நெல்லை ,ஏப்ரல் 29 : நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜ். இவர் மணிமுத்தாறு காவல் பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக எஸ்பிஐ வங்கி கிளை மூலமாக டாட்டா ஏஐஜி பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் குழு காப்பீட்டுத் திட்டம் ஒன்றில் இணைந்து ,அதற்கான தவணைத் தொகைகளையும் முறையாகச் செலுத்தி வந்தார். இந்த சூழலில் ,கடந்த 2022 ஆகஸ்ட் 22ஆம் தேதி வீட்டில் குளிக்கச் சென்ற வரதராஜ் ,எதிர்பாராதவிதமாக அங்கு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் ,அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வின் அறிக்கையில் ,இது இயற்கை மரணமாக இருக்கலாம் என்றும் ,எனினும் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மருத்துவ அறிக்கையில் இருந்த இந்தத் தெளிவற்ற தன்மையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட காப்பீட்டு நிறுவனம் ,விபத்து மரணத்திற்கான உரிய காரணம் நிரூபிக்கப்படவில்லை என்ற தொழில்நுட்பக் காரணத்தைக் கூறி ,வரதராஜின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை நிராகரித்தது.
also : கோடை வெப்பம் அதிகரிக்கையில் சிறுநீரக கற்கள், UTI நோய்கள் ஏன் அதிகரிக்கின்றன?
கணவரை இழந்து தவித்த நிலையில் ,காப்பீட்டு நிறுவனத்தின் இந்தத் தன்னிச்சையான முடிவை எதிர்த்து வரதராஜின் மனைவி மாலதி நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது ,உடற்கூறு ஆய்வு அறிக்கையில் வரதராஜின் மூக்கு மற்றும் காலில் சிறு காயங்கள் இருந்ததும் ,மூளையில் லேசான வீக்கம் ஏற்பட்டிருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மேலும் ,உயிரிழப்பதற்கு முன்பு வரதராஜுக்கு எவ்விதமான நாள்பட்ட நோய்களோ அல்லது உடல்நலக் குறைபாடுகளோ இருந்ததில்லை என்பதும் சான்றாதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ,குளிக்கும் அறையில் கால் தவறி விழுந்ததன் காரணமாகவே தலையில் அடிபட்டு இந்த மரணம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்ற நியாயமான முடிவுக்கு வந்தது. உடற்கூறு அறிக்கையின் சிறிய தொழில்நுட்பக் குறைபாடுகளைக் காரணம் காட்டி ,பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதார உரிமையை மறுக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம் ,காப்பீட்டு நிறுவனத்தின் நிராகரிப்பு உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது.
மேலும் ,உயிரிழந்த வரதராஜின் மனைவி மாலதிக்கு காப்பீட்டுத் தொகையான ரூ.30 லட்சம் முழுவதையும் ,கடந்த 30.12.2024 முதல் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று டாட்டா ஏஐஜி காப்பீட்டு நிறுவனத்திற்கு நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








