
வாஷிங்டன் , ஏப்ரல் 3: மேற்கு ஆசிய பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் பதற்றம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இரானின் காரஜ் நகரில் அமைந்துள்ள மிக முக்கிய உள்கட்டமைப்பான பி1 பாலம் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ,குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டெஹ்ரானை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்துப் பாதையாக விளங்கிய காரஜ் பாலம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து ,அமெரிக்காவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இரான் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எதிராக ‘பாலத்திற்குப் பாலம்’ (Bridge for Bridge) என்ற புதிய உத்தியை கையில் எடுத்துள்ள இரான் ,வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முக்கிய பாலங்களை இலக்கு வைக்கப்போவதாக எச்சரித்துள்ளது.
Also : வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு – திடீர் நெஞ்சுவலி காரணமா?
இரான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எச்சரிக்கைப் பட்டியலில் குவைத் ,ஐக்கிய அரபு அமீரகம் ,சவூதி அரேபியா ,பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த நடவடிக்கை வெறும் வாய்மொழி எச்சரிக்கையாக மட்டும் இல்லாமல் ,எந்த நேரத்திலும் நேரடி ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதலாக மாறக்கூடும் என்ற அச்சம் சர்வதேச சமூகத்தில் எழுந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டணிக்கும் இரானுக்கும் இடையே வளைகுடா பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர் மோதல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நீண்டகாலப் போரின் மிக முக்கிய திருப்புமுனையாக காரஜ் பாலம் மீதான தற்போதைய தாக்குதல் பார்க்கப்படுகிறது.
காரஜ் பாலம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள அறிக்கையில் ,இரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் இராணுவ நிலைகள் மீது அடுத்தடுத்து கூடுதல் தாக்குதல்களை நடத்த அமெரிக்கப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல் உலகளாவிய பொருளாதாரத்திலும் ,சர்வதேச வர்த்தகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ,உலகின் மிக முக்கிய கடல்வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து இந்தத் தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு ,எரிபொருள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.








