சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித் திட்டம் தீட்டப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேரம் பேசும் விவகாரத்தில், திருவல்லிக்கேணி போலீஸார் இதுவரை ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வழக்கில் கூடுதல் விவரங்களையும், இதன் பின்னணியில் உள்ள மற்ற நபர்களையும் கண்டறியும் நோக்கில், கைதானவர்களில் ஐந்து பேரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விடிய விடிய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி, தங்களின் சதித் திட்டங்களை வகுத்துள்ளது தெரியவந்துள்ளது. அங்கு வைத்து, ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு 35 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதற்கு இவர்கள் திட்டமிட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு நீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அவர்கள் இருவரும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இதற்கான நீதிமன்ற உத்தரவு நகல் இன்னும் தங்களின் கைகளுக்குக் கிடைக்காததால் அவர்கள் இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்று அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், காவல்துறையினர் இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போதைய விசாரணையின்படி, சிங்கப்பூரில் வசித்து வரும் லட்சுமண பெருமாள் என்ற நபர் இந்த குதிரை பேர விவகாரத்தின் பின்னணியில் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தங்கி இதற்கான முதற்கட்ட சதித் திட்டங்களை தீட்டிய அவர், அதன் பின்னர் சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்தபடியே இந்த நெட்வொர்க்கை இயக்கியதாக காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
அதுமட்டுமன்றி, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியதற்கான ஆதாரங்கள், சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட முக்கியத் தடயங்களை லட்சுமண பெருமாள் அழித்துள்ளதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் இருந்துகொண்டே குற்றவாளிகளுக்கு இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் செல்போன் தரவுகளையும் அவர் தொழில்நுட்ப ரீதியாக அழித்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆதாரங்களை மீட்டெடுக்கும் முயற்சியிலும், லட்சுமண பெருமாள் இந்த வழக்கிற்குள் எப்படி வந்தார், யாருடைய பணப் பரிவர்த்தனை இதன் பின்னணியில் உள்ளது என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
காவலில் எடுத்து விசாரிக்கப்படும் ஐந்து நபர்கள் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னையில் உள்ள இரண்டு மருத்துவர்களைப் பிடித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் சிங்கப்பூர் நபர் லட்சுமண பெருமாள் குறித்து இந்த மருத்துவர்களுக்கு ஏதேனும் தொடர்போ அல்லது தகவல்களோ தெரியுமா என்ற கோணத்தில் போலீஸார் முதற்கட்டமாக இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் இருவரையும் ஒன்றாக அமர வைத்தும் தற்பொழுது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
தமிழக அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த குதிரை பேர வழக்கின் முழுப் பின்னணியிலும், இதன் சூத்திரதாரிகளாகவும் செயல்பட்ட அனைவரையும் கைது செய்யும் நோக்கில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் தங்களின் விசாரணை வளையத்தை சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.




