தென்காசி , ஜூலை 4: தென்காசி அருகே வாலிபால் விளையாடிய வாலிபர்களுடன் ஏற்பட்ட தகராறில், கோஷ்டி மோதலாக மாறி படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.
தென்காசி மங்கம்மாள் சாலை மாரியம்மன் கோவில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர்கள் சிலர் வாலிபால் விளையாடி முடித்துவிட்டு, இரவில் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அஜயன் என்பவரது மகன் ஆதித்யன் (19), இங்கு வந்து ஏன் சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Also Read : நெல்லையில் 4.350 கிலோ கஞ்சா வழக்கு: பல மாதங்கள் தலைமறைவான பீர் முகமது அதிரடி கைது!
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆதித்யன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அங்கிருந்த காளிதாஸ் என்ற வாலிபரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த காளிதாஸை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே காளிதாஸை வெட்டிவிட்டு ஆதித்யன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால் அவரது தந்தை அஜயன் மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த காளிதாஸின் ஆதரவாளர்களான அய்யப்பன், கோவிந்தராஜ், காசிநாதன், பிரகாஷ், ரித்தீஷ், கொம்பையா உள்ளிட்ட கும்பல், உன் மகன் தான் இந்த வன்முறைக்குக் காரணம் எனக் கூறி அஜயனைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாக அடித்து உதைத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இத்தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அஜயன், உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சனிக்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக இந்த மோதல் சம்பவம் குறித்து தென்காசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். காளிதாஸை அரிவாளால் வெட்டிய ஆதித்யனையும், ஆட்டோ ஓட்டுநர் அஜயனைத் தாக்கிய வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 6 பேரையும் போலீஸார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜயன் தற்போது உயிரிழந்துவிட்டதால், இந்த அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து தென்காசி போலீஸார் மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





