மும்பை , ஜூன் 29: மும்பையில் நடைபெற்ற பாரம்பரிய மொஹரம் பண்டிகை ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விஷ மாத்திரைகளை விநியோகித்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த முயன்றதாக புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரிடமிருந்து சுமார் 14,900 ஆபத்தான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தின் பின்னணியில் சர்வதேசத் தொடர்புகள் ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் புனேயின் விமன் நகர் பகுதியைச் சேர்ந்த பயாஸ் பிரேம்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளார். பெயிண்ட் தொழில் செய்து வரும் இவர் மொஹரம் ஊர்வலத்திற்கு முன்னதாக மும்பையின் டாங்கிரி பகுதியில் தங்கியிருந்த போது போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளார். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாத்திரைகளில் ‘ஜிங்க் பாஸ்பைடு’ (Zinc Phosphide) எனப்படும் வீரியமிக்க எலி மருந்து கலக்கப்பட்டிருப்பது முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த மாத்திரைகளை ஊர்வலத்தில் கூடும் பொதுமக்களுக்குப் பிரசாதம் போலவோ அல்லது வேறு வழியிலோ விநியோகிக்க இவர் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ALso read : ஆந்திராவில் ‘கேஜிஎஃப்’ பாணியில் அமையும் இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்
விசாரணையில் பிரேம்ஜி குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ‘ஷியா கோஜா’ (Shia Khoja) என்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 14-ஆம் நூற்றாண்டில் வணிகப் பின்னணியைக் கொண்ட இச்சமூகத்தினர் காலப்போக்கில் இஸ்லாமியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்களாக வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து பெற்றவரான பிரேம்ஜியின் தாயாரும், பிசியோதெரபிஸ்டாகப் பணியாற்றும் அவரது சகோதரியும் தற்போது ஈரானில் வசித்து வருவதாகப் போலீஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்கள் ஏதேனும் உள்ளதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு விசாரணை அந்த திசையிலும் நகர்ந்து வருகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமான மொஹரம் மாதத்தில் கர்பாலா போரில் வீரமரணமடைந்த இமாம் உசேன் இப்னு அலியின் தியாகத்தை நினைவுகூர்ந்து ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் துக்கம் அனுசரிப்பது வழக்கம். இந்த ஊர்வலங்களின் போது மும்பையின் முக்கியச் சாலைகளில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரள்வது வழக்கம் என்பதால் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இந்த சதி அரங்கேற்றப்படவிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி பிடிபட்ட மாத்திரைகளில் உள்ள ‘ஜிங்க் பாஸ்பைடு’ மனித உடலுக்குள் சென்றால், அது வயிற்றில் உள்ள அமிலங்களுடன் வினைபுரிந்து ‘பாஸ்பைன்’ (Phosphine) என்ற ஆபத்தான நச்சு வாயுவை உருவாக்கும். இது கடுமையான வாந்தி, வயிற்று வலி, கடுமையான மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு ரத்த அழுத்தத்தை சட்டென்று குறைத்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை முழுமையாகச் செயலிழக்கச் செய்யக்கூடியது.
ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவிருந்த ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் போலீசாரின் துரித நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் பிரேம்ஜி மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவரது உண்மையான நோக்கம் என்ன மற்றும் இந்த சதியின் பின்னணியில் உள்ள பிற நபர்கள் யார் என்பது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





