திமுக ஆட்சி காலத்தில் உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு புகார்: தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 28: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தையும் உயர்கல்வித் தரத்தையும் தீர்மானிக்கக்கூடிய இந்த நியமனங்களில் தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதை புதிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Former CM EPS Urges TVK Government to Probe Alleged Irregularities in Assistant Professor Recruitment During DMK Rule

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலமாக 2,708 அரசு கல்லூரி உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி தேர்வுகள் நடத்தப்பட்டன. பல ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 42,000 பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழித் தகுதித் தாள் தவிர, பிற பாடங்களுக்கான முதன்மைத் தேர்வில் 150 மதிப்பெண்களுக்கான புறநிலை வினாக்கள் (Objective Type) பகுதியும் 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரைத் தாள் (Descriptive Type) பகுதியும் இடம்பெற்றிருந்தன.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: அமைச்சர் ரமேஷ் நேரடி ஆய்வு!

தற்போது இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மதிப்பெண் வழங்கப்பட்ட முறையில் பல்வேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் அரங்கேறியுள்ளதாகத் தேர்வர்கள் மத்தியில் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி தகுதி வாய்ந்த பல தேர்வர்களின் இறுதி வாய்ப்பு இதன் மூலம் பறிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழ் பிரிவைச் சேர்ந்த தேர்வர் ஒருவர் 150 மதிப்பெண்களுக்கான புறநிலை வினாத் தாளில் 111 மதிப்பெண்கள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் அவருக்குரிய 50 மதிப்பெண் விளக்கக் கட்டுரைத் தாளில் பூஜ்ஜியம் (0) மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு நேர்மாறாக புறநிலை வினாத்தாளில் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற சில தேர்வர்களுக்கு விளக்கக் கட்டுரைத் தாள் மதிப்பீட்டில் 50-க்கு 49 மதிப்பெண்கள் வரை மிக தாராளமாக வழங்கப்பட்டுள்ளது.

விளக்கக் கட்டுரைத் தாளில் தங்களுக்குச் சாதகமானவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்களை அள்ளி வழங்கியதன் மூலம், தகுதியானவர்களின் இறுதித் தரவரிசைப் பட்டியல் (Rank List) திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பல வருடங்களாகப் படித்து அரசுப் பணிக்காகக் காத்திருந்த ஏழை, எளிய பட்டதாரி இளைஞர்களின் உழைப்பை வீணடிக்கும் வகையில் இந்த மதிப்பீட்டு மோசடி அமைந்திருப்பதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேபோல்தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி 60 நாட்களைக் கடந்த நிலையிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான சரியான வழிமுறைகளை அரசு இன்னும் முழுமையாக வகுக்கவில்லை. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் அரசு கலைக் கல்லூரிகளில் இதுவரை சுமார் 45 சதவீத இடங்கள் காலியாகவே கிடக்கின்றன. இது ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

வருங்காலத் தலைமுறையினரின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமானால் அதற்குத் தகுதியான பேராசிரியர்களை நியமிப்பதும், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொய்வின்றி நடத்துவதும் அவசியம். எனவே கல்வித் துறையைச் சீரமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவி பேராசிரியர் தேர்வு முறைகேடு புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கக் கட்டுரைத் தாள் மதிப்பீட்டிற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் பயன்படுத்திய அளவுகோல்கள், மாதிரி விடைகள் (Model Answers) மற்றும் மதிப்பெண் வழங்கப்பட்ட முறைகளை டிஆர்பி நிர்வாகம் உடனடியாகப் பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட தேர்வர்களின் நலன் கருதி வெளிப்படையான முறையில் மறுமதிப்பீடு (Revaluation) நடத்தத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *