சென்னை , ஜூன் 27 : சென்னை நொளம்பூரில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சி-பிரிவு ரவுடி ரூபேஷை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மகன்கள் சஞ்சய் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவு முருகதாஸ் அவரது மனைவி செல்வி மற்றும் மகன்கள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த எட்டு பேர் கொண்ட கும்பல், முருகதாஸ் மற்றும் அவரது மகன்கள் சஞ்சய், சரத்குமார் ஆகியோரைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.
ஓசூர் இருசக்கர வாகன டிக்கியில் நல்லபாம்பு: அதிர்ச்சியில் வாகன ஓட்டி
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த செல்வி இரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த முருகதாஸ் மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நொளம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ரவுடி கார்த்திக்கின் சகோதரர் உதயாவை சஞ்சய் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இரவு சஞ்சய் தண்ணீர் கேன் எடுத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியபோது ரவுடி கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் சஞ்சய்யிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சஞ்சய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து வந்த கார்த்திக் தலைமையிலான கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சி-பிரிவு ரவுடி ரூபேஷை காவல்துறையினர் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ரூபேஷைப் பிடிக்கச் சென்றபோது அவன் காவல் துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றுள்ளான். அப்போது தற்காப்புக்காகக் காவல்துறையினர் ரூபேஷின் கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
காயமடைந்த ரூபேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திக் உட்பட மொத்தம் எட்டு நபர்களைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





