சென்னை , ஜூன் 23: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதான விவாதத்தின் போது தமிழக முதலமைச்சர் விஜய் ஆக்ரோஷமாக உரையாற்றினார். அப்போது எதிர்கட்சியான திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் உரையைத் தொடங்கிய முதலமைச்சர் விஜய், கடந்த கால ஊழல்களையும், தற்போதைய அரசின் மக்கள் நலத்திட்டங்களையும் ஒப்பிட்டுப் பேசினார். கட்சி நிதி என்ற பெயரில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தற்போது ஒவ்வொன்றாக அரசு கஜானாவிற்குள் திரும்பக் கொண்டு சேர்க்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாவைக் கூட தங்களது அரசு தொடாது என்றும் யாரையும் தொட விடமாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். மக்கள் பணத்தைத் தொட்டால் சும்மா விடமாட்டோம் என்று எச்சரித்த அவர், இதற்கு முன்னால் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று உறுதியளித்தார். தற்போதைய அரசின் தீவிர நடவடிக்கைகளால் ஒவ்வொரு ஊழலாக வெளியே வரும்போது பலரின் உண்மை முகம் வெளிப்பட்டு வருவதாகவும் இதனால் இங்கிருக்கும் பலர் நடுங்கிப் போய் தம்மீது அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
TN Assembly : கோவில் நிதி விவகாரம்: பேரவையில் தவெக – திமுக இடையே காரசார விவாதம்
TN Assembly : தொழிற்சாலை விபத்து: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அமைச்சர் பர்வேஷ் விளக்கம்
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், அண்மைக்காலமாகத் தங்களுக்கு எதிராகப் புதிய ஆயுதம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய ஆட்சி சிலரது தயவால்தான் நடப்பதாகப் பரப்பப்படும் கருத்துகளை அவர் மறுத்தார். இந்த அரசு மக்கள் தயவாலும் மனசாட்சியுள்ள சக்திகளின் ஆதரவாலும் மட்டுமே சிறப்பாகத் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் தெளிவுபடுத்தினார். தங்களைத்தான் அனுப்பி வைத்தோம் என்று கூறுபவர்கள், அமைச்சரவையில் இடம் கொடுத்தபோது ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள், ஏன் கதறுகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களுக்கு ஆதரவு அளித்தது அந்தந்தக் கட்சிகள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இதில் சிலர் நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்றார். பொதுமக்கள் அனைத்தையும் தெளிவாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூக நீதி குறித்துப் பேசுபவர்களை நோக்கிப் பல கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், சமூக நீதி அரசு என்று தம்பட்டம் அடிப்பவர்கள் பட்டியலின சகோதரர்களுக்கு எத்தனை அமைச்சர் பதவிகளைக் கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார். ஆனால் தங்களது தற்போதைய அரசு, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவர்கள் அனைவரும் நமது அண்ணன், தம்பி, தங்கைகள் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்ட அவர் இதன் மூலம் அண்ணல் அம்பேத்கரின் நூறாண்டு காலக் கனவு தற்போது தங்களது ஆட்சியில் நனவாகியிருக்கிறது என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார். முதலமைச்சரின் இந்த ஆக்ரோஷமான பதிலடியைத் தொடர்ந்து அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.





