ஓசூர் , ஜூன் 22: ஓசூரில் பல்வேறு பகுதிகளில் தெருவில் சுற்றித்திரிந்த வெறி நாய் ஒன்று, இரண்டு பெண்கள் உட்பட 12 பேரை துரத்தித் துரத்திக் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர், ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு, ரயில்வே ஸ்டேஷன் சாலை, ஆர்.சி சர்ச் பகுதி மற்றும் ரிங் ரோடு ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில் இன்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றுக்கு திடீரென வெறி பிடித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களை அந்த நாய் திடீரென அச்சுறுத்தும் வகையில் துரத்தத் தொடங்கியது. நிலைமையை உணர்ந்து மக்கள் சிதறி ஓடிய நிலையிலும் அஸ்வினி, பவானி ஆகிய இரண்டு பெண்கள் மற்றும் நந்தகுமார், தமிழ்ச்செல்வன், மல்லிகார்ஜுனா, நந்தீஸ், அருண் உள்ளிட்ட 12 பேரை அந்த நாய் துரத்தித் துரத்திக் கடித்தது.
நாய் கடித்ததில் படுகாயமடைந்த 8 பேர் உடனடியாக மீட்கப்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் லேசான காயமடைந்த மற்ற 4 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடு திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வெறி நாய் இன்னும் அதே பகுதிகளில் தொடர்ந்து சுற்றித்திரிந்து வருவதால் வேலைக்குச் செல்வோர், பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். சாலையில் நடந்து செல்வோர் கைகளில் தடியுடன் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், இந்த வெறி நாய் மேலும் பலரைத் தாக்குவதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்





