மயிலாடுதுறை , ஜூன் 22: மயிலாடுதுறை: தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தற்போதைய ஆளுங்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சர் விஜய், கூட்டுறவு கடன் சங்கங்களில் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு நூறு சதவீத தள்ளுபடியும் அதற்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
also : TN Assembly : கோவில் நிதி விவகாரம்: பேரவையில் தவெக – திமுக இடையே காரசார விவாதம்
அரசின் இந்த அறிவிப்பு தங்களை ஏமாற்றும் செயலாக இருப்பதாகக் கூறி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நிபந்தனைகள் இன்றி முழுமையான தள்ளுபடி வழங்கக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட அவைத் தலைவர் பண்டரிநாதன், மாவட்டச் செயலாளர் கும்கி ராஜேந்திரன் மற்றும் கௌரவத் தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் கூட்டுத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
வறட்சி பருவம் தவறிய மழை மற்றும் உடுபொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் ஏற்கனவே வாழ்வாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில் சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகள் என எவ்வித பாகுபாடும் இன்றி கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே தங்களின் முதன்மையான கோரிக்கை என போராட்டத்தில் ஈடுபட்ட சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாவிடில் அடுத்தகட்டமாகப் போராட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாகவும் விவசாயிகள் கூட்டமைப்பினர் எச்சரித்துள்ளனர்.





