திருவள்ளூர் , ஜூன் 22: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் ஏற்றுமதி நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவினால் வட மாநில தொழிலாளர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாயு பாதிப்புக்குள்ளான 74 தொழிலாளர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்கோர விபத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் அவசர உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று அந்த தொழிற்சாலையில் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
விபத்து நடந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் தற்போதும் அதிக அளவில் அமோனியா வாயு இருப்பு வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு எஞ்சியிருக்கும் சுமார் 1.5 டன் எடையுள்ள அமோனியா வாயுவை முழுமையாக வெளியேற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வரவழைக்கப்பட்டுள்ள ராட்சத டேங்கர் லாரி மூலம் ஆலையில் உள்ள அமோனியாவை பாதுகாப்பாக நிரப்பி மாற்றுப் பகுதியில் செயல்பட்டு வரும் உர தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வாயுவை அப்புறப்படுத்தும் போது மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது தீயணைப்புத் துறை தலைமை உதவி இயக்குனர் சரவணகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த அமோனியா வாயுவை வெளியேற்றும் பணிகள் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆலையில் தேங்கியுள்ள ஆபத்தான வாயு முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டவுடன் அந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையை முழுமையாக இழுத்து மூடி சீல் வைக்கும் நடவடிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்





