கிருஷ்ணகிரி , ஜூன் 18 : கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பரவலாக லஞ்சப் புகார்கள் எழுந்து வந்த நிலையைக் கண்காணித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மாநிலம் தழுவிய அளவில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முறைகேடாகப் பணம் வசூலிக்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர் இன்று மாலை கிருஷ்ணகிரி அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.
also : பழைய ஓய்வூதிய வரைவுக் குழு அறிவிப்பில் பணிக்கொடை விடுபட்டது அதிர்ச்சி: ஜாக்டோ-ஜியோ
போலீஸார் உள்ளே நுழைந்த உடனே வெளி நபர்கள் யாரும் தப்பி ஓடாத வகையிலும் வெளியில் உள்ளவர்கள் உள்ளே வராதவாறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் முதன்மை நுழைவு வாயில் கதவுகள் அனைத்தும் உடனடியாகப் பூட்டப்பட்டன. தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் , ஊழியர்கள் மற்றும் அங்கு நின்றிருந்த இடைத்தரகர்களிடம் போலீஸார் தனித்தனியாகச் சோதனைகளைத் தொடங்கினர்.
அங்கிருந்த கணினிகள் , கோப்புகள் மற்றும் மேஜை அறைகள் எனப் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாகத் தேடுதல் நடத்தினர். இந்தச் சோதனையின் போது அலுவலக வளாகத்திற்குள் இருந்த இடைத்தரகர்களிடமிருந்து கணக்கில் வராத மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் கண்டெடுத்துப் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்திற்குரிய முறையான ஆவணங்களோ அல்லது விளக்கங்களோ சம்பந்தப்பட்ட நபர்களிடம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இந்த முறைகேடு மற்றும் பணப் பறிமுதல் விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் ஆகிய இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் பணத்துடன் பிடிபட்ட இடைத்தரகர்களான ஜார்ஜ் , கார்த்திக் , பிரகாஷ் , பழனி , சுரேஷ் மற்றும் கபார் ஆகிய ஆறு பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இந்தச் சோதனையின் முடிவில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் அதிகாரப்பூர்வத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிடிபட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி , மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் இடைத்தரகர்கள் ஜார்ஜ் , கார்த்திக் , பிரகாஷ் , பழனி , சுரேஷ் , கபார் ஆகிய 8 பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் முறைப்படி தெரிவித்துள்ளனர்.







