தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

நெல்லை ,ஜூன் 17 : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும்,தினசரி நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எதுவும் தெரிவதில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க.வைச் சேர்ந்த தயாசங்கர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை பாரதிய ஜனதாவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முத்து பலவேசம்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலாஜி,கிருஷ்ணசாமி,நாகராஜன் மற்றும் பட்டியல் அணி பிச்சையா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பல்வேறு பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில்,தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று 35 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்ற சம்பவங்கள் தான் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் 17 கற்பழிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

also : கோவில்பட்டி அம்மா உணவகத்தில் முறைகேடு: ஹோட்டல்களுக்கு மொத்தமாக இட்லி விற்பனை

தேர்தல் காலப் பிரச்சார நடைமுறைகளை விமர்சித்த அவர்,கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களைப் பார்த்து ‘ப்ரோ’ என்றும் ‘அங்கிள்’ என்றும் நெருக்கமாகப் பேசிய விஜய் தற்போது எங்கே சென்றார் என்றே தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும்,சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று 3 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு முப்புதரில் வீசப்பட்டுள்ளார். இந்தச் சம்பவங்கள் எல்லாம் முதலமைச்சர் விஜய்க்குத் தெரியுமா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

நெல்லை மாவட்டத்தின் நிலவரம் குறித்தும் கவலை வெளியிட்ட அவர்,நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த வாரத்தில் 40 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் இதைப் பற்றி வாயே திறக்காமல் முதலமைச்சர் காலை 10 மணிக்குத் தலைமைச் செயலகம் வருகிறார்,மாலை 5 மணிக்கு வீட்டுக்குச் செல்கிறார். மதிய உணவை அங்கு வரவழைத்துச் சாப்பிடுகிறாரே தவிர,மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை. அவர் சந்திப்பது எல்லாமே சினிமா பிரபலங்களை மட்டும்தான். அவர்களை மட்டும் நேரில் பார்த்துப் பேசி,படம் எடுப்பது குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தி வருகிறார் என்று சாடினார்.

தமிழகத்தில் தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் குதிரை பேரம் குறித்தும் பா.ஜ.க மாநில தலைவர் கடுமையான விமர்சனங்களை வைத்தார். புதிய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அ.ம.மு.க உறுப்பினரை விலை பேசி வாங்கினார்கள். அதைத் தொடர்ந்து தற்போதும் குதிரை பேரம் நடத்தி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வருகிறார்கள். சாதாரண உறுப்பினர்களைக் கட்சியில் சேர்ப்பது என்பது வேறு,ஆனால் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்களை விலைக்குப் பேசி வாங்குவது முற்றிலும் தவறான செயல். இதன் மூலமாக மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகும். இதனால் அரசு பணம் தான் வீணாகச் செலவாகும். இது ஒரு முதிர்ச்சியற்ற அரசியல் தன்மையைக் காட்டுகிறது. குதிரை பேரம் நடத்தி வரும் இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை ஆதவ் தான் தொடர்ந்து விலை பேசி வாங்கி வருகிறார் என்றும் இந்த நிலை ரொம்ப நாட்கள் நீடிக்காது,வரும் காலம் பாரதிய ஜனதாவின் காலமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் நிர்வாகத் திறன் குறித்துப் பேசுகையில்,விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி என்பது சுத்தமாக இல்லை. விஜய் அல்லது அண்ணாமலை போன்ற நபர்கள் புதிய கட்சி தொடங்கியுள்ளதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12 ஆண்டுகளாக நாட்டில் நல்லாட்சி நடத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தை நான் சந்தித்த போது அரசியல் சம்பந்தமாக எதுவுமே பேசவில்லை. அவர் எந்தக் கட்சியிலும் கிடையாது,எந்தக் கட்சிக்கும் வர மாட்டார் என்றும் தெளிவுபடுத்தினார்.

கடந்த தி.மு.க ஆட்சியைப் போன்றே இந்த புதிய ஆட்சியிலும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் விஜய் தவறிவிட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை. காலையில் ஒரு உத்தரவு போடுகிறார்கள்,மாலையில் அதை உடனே நிறுத்தி விடுகிறார்கள். சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் சிவகங்கையில் அந்தச் சிங்கப்பெண் குழுவில் இருந்த பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் இன்று நீடிக்கிறது என்றார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்விக்கு,உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோதும் சரி,தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும் சரி எப்போதுமே அவரது செயல்பாடு சரியாக இருந்ததில்லை என்று விமர்சித்தார்.

அண்ணாமலைக்கு 17 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் தகவல் குறித்த கேள்விக்கு,ஒரே நாளில் எனக்கும் 30 லட்சம் பேர் ஆதரவாக இருக்கிறார்கள் என்று என்னால் காட்ட முடியும் என்று பதிலளித்தார். இறுதியாக,வரும் தேர்தலில் தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கூட்டணி வைக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து உரிய பதில் தெரிவிப்போம் என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »