சிவகங்கை , ஜூன் 16 : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஆறு வயதுக்குட்பட்ட 145 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் உட்செவி உள்வைப்பு சுருள் கருவி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த அதிநவீன சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களின் கேட்கும் திறனையும் பேசும் திறனையும் முழுமையாகப் பெற்று மறுவாழ்வு அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது ,இந்தத் தொடர் மருத்துவச் சேவையின் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை நான்கு குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லணையில் ஜூன் 16 அணை திறப்பு இல்லை: வறண்ட காவிரியால் டெல்டா விவசாயிகள் வேதனை
வழக்கமாக இந்த காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகளுக்கு முறையான பயிற்சி அளிப்பது அவசியமாகும் ,அதனைக்கருத்தில் கொண்டு இந்த அறுவை சிகிச்சை முடிவடையும் குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை முற்றிலும் இலவசமாகப் பேச்சுப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது ,தனியார் மருத்துவமனைகளில் இந்த ஒட்டுமொத்த சிகிச்சை முறைகளுக்கும் பத்தாயிரம் ரூபாய் முதல் பதினைந்து லட்சம் ரூபாய் வரை பெருந்தொகை செலவாகும் நிலையில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அரசு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த அதிநவீன சிகிச்சை இத்தோடு இலவசமாக சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது தமிழக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது ,சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள முன்னணி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவச் சேவைகளுடன் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சைகள் மட்டுமன்றி பல்வேறு அரிய வகை மற்றும் சிக்கலான இதர அறுவை சிகிச்சைகளும் இங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன ,அந்த வகையில் சமீபத்தில் மூளை நீர்க்கசிவு பாதிப்பால் தீவிர அவதிக்குள்ளான 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு அரிய வகை எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை இங்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது ,அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களிலேயே அந்தப் பெண் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் ,தனியார் மருத்துவமனைகளில் மூன்று லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்த அரிய வகை சிகிச்சையும் எவ்வித கட்டணமுமின்றி அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நாக்குப் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த 64 வயது முதியவர் ஒருவருக்கு மிகவும் சிக்கலான புற்றுநோய் அகற்றும் அறுவை சிகிச்சையையும் இம்மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர் ,தனியார் மருத்துவமனைகளில் நான்கு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு பிடிக்கக்கூடிய இந்த புற்றுநோய் ஒழிப்பு சிகிச்சையும் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவே முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது.
தலைநகரம் மற்றும் பெரிய நகரங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் தென் மாவட்ட மக்களுக்கு இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒரு முக்கிய வரப்பிரசாதமாக மாறி வருகிறது ,எனவே இதுபோன்ற காது கேளாமை, வாய் பேசாமை குறைபாடுகள், மூளை பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் தேவைப்படும் பொதுமக்கள் எவ்வித தயக்கமுமின்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேரில் அணுகி உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுப் பயன்பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளது.








