நெல்லை , ஜூன் 16 : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 60 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியொன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற 60 வயது முதியவர் அந்த மாணவியிடம் ஆபாசமான முறையில் நடந்துகொண்டதோடு பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் உடனடியாக சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.முதியவர் முத்துக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட அந்த புகாரின் பேரில் பெண் போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.
சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவிக்கு முத்துக்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முத்துக்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.பள்ளி மாணவிக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான இந்த சம்பவம் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.








