புதுடெல்லி , ஜூன் 12 : மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் டெல்லியிலேயே முகாமிட்டு மத்திய அமைச்சர்களுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற அவர், கூட்டம் நிறைவடைந்த பின்னரும் அங்கேயே தங்கி இப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிய நிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் மட்டும் டெல்லியிலேயே தங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் ரூ.134 கோடியில் குருவை சிறப்புத் தொகுப்பு திட்டம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவெளியிலும் அதற்குப் பின்னரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை டி.கே.சிவகுமார் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளின் போது மேகதாதுவில் அணை கட்டுவதற்காகக் கர்நாடக அரசு தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை (DPR) அவர் மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். இந்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு உடனடியாகத் தனது இறுதி ஒப்புதலை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இன்று மதியம் 1 மணி அளவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை கர்நாடக முதல்வர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேகதாது அணை கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு மத்திய நீர்வள அமைச்சகத்தின் அனுமதி மிகவும் இன்றியமையாதது என்பதால் இந்த சந்திப்பின் போது திட்டத்திற்கான ஒப்புதலை விரைந்து வழங்குமாறு அவர் அழுத்தம் கொடுக்க உள்ளார்.
கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற டி.கே.சிவகுமார், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்பதில் ஆரம்பத்திலிருந்தே உறுதியாகச் செயல்பட்டு வருகிறார். காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணையைக் கட்டுவதற்கான முயற்சிகளை முந்தைய பாஜக அரசும், அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வந்தன. தற்போது சித்தராமையாவுக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில் இந்த விவகாரத்தை அவர் மிகத் தீவிரமாக கையில் எடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்குத் தொடக்கம் முதலே கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. மேகதாதுவில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்ட முடியாது என்றும், அதற்குத் தங்களுக்கு சட்டரீதியான உரிமைகள் உண்டு என்றும் தமிழகத் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அணை கட்டுவதற்கு தற்போது சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயத்திற்கு வரும் தண்ணீரின் அளவு பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால் கர்நாடக அரசின் இந்த தற்போதைய நகர்வுகள் தமிழகத் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.








