மேட்டூர் , ஜூன் 11 : டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டில் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் நாளை அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாகவும் தமிழகத்தின் நெற்கலஞ்சியமாகவும் விளங்கும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை மேட்டூர் அணையே முதன்மையாகப் பூர்த்தி செய்து வருகிறது. கடந்த 1934-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. வழக்கமாக டெல்டா பகுதியில் குருவை சாகுபடி மேற்கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த அணை திறப்பு என்பது முற்றிலும் மேட்டூர் அணையில் ஜூன் மாதத் தொடக்கத்தில் இருக்கக்கூடிய நீர் இருப்பைப் பொறுத்தே அமையும். நீர் இருப்பு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்ட வரலாறும் உண்டு. அதேபோல நீர் இருப்பு போதிய அளவில் இல்லாத காலங்களில் தண்ணீர் திறப்பு தள்ளிப்போயிருக்கிறது.
ALso :மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா செயல்படுவது சட்டவிரோதம் – அன்புமணி ராமதாஸ்
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடிக்கும் குறைவாகவே நீடிக்கிறது. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி அணை திறக்கப்பட வேண்டும் எனில் அணையில் குறைந்தபட்சம் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை. ஆனால் இப்போது 79 அடிக்கும் கீழே நீர்மட்டம் சரிந்துள்ளதால் பாசனத்திற்காக நாளை அணை திறக்கப்பட மாட்டாது என்று நீர்வளத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டு குருவை சாகுபடி தொடங்குவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் மேட்டூர் அணைக்குக் கிடைத்த நீர்வரத்து மிகவும் சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகக் கடந்த 2025-ஆம் ஆண்டில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை ஏழு முறை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனால் கடந்த ஆண்டுகளில் டெல்டா பாசனத்திற்கு எவ்வித தங்குதடையுமின்றி உரிய நேரத்தில் தண்ணீர் தாராளமாகத் திறந்துவிடப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டின் நிறைவுப் பகுதியிலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையில்லாததால் நீர்மட்டம் 120 அடியிலிருந்து தற்போது 79 அடிக்கும் கீழ் கடகடவென சரிந்துள்ளது.
இனிவரும் நாட்களைப் பொறுத்தவரை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வேண்டும். அப்படித் தீவிரமடைந்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தால் மட்டுமே நடப்பு குருவை மற்றும் அடுத்து வரும் சம்பா சாகுபடிகளுக்குத் தண்ணீர் திறந்துவிட சாத்தியக்கூறுகள் உருவாகும்.
தற்போது நிலவும் இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அதிகாரிகள் அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிட்டு வருகின்றனர். வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வடகிழக்கு பருவமழை ஆகியவை எதிர்பார்த்தபடி கை கொடுத்தால் மட்டுமே மேட்டூர் அணை மீண்டும் முழுமையாக நிரம்பும். அதன் பிறகே டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீர் விநியோகத்திற்கும் தடையின்றித் தண்ணீர் வழங்க முடியும் என்பதால் அதிகாரிகள் தொடர்ந்து நீர்வரத்தைக் கண்காணித்து வருகின்றனர்.








