சென்னை , ஜூன் 8: தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும், ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பதவி உயர்வு நிலுவைகளை விரைந்து வழங்குவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணிச்சுமை மிக அதிகமாக இருப்பதை அரசு உணர்ந்துள்ளது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின் விநியோகத்தை தடையின்றி வழங்குவதில் ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. எனவே அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.
also : தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தமா? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தற்போதைய சூழலில் மின்சார வாரியத்தில் சுமார் 70,000 பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளன. இந்த கடுமையான பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் விதமாக முதற்கட்டமாக இந்த ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 15,000 பணியிடங்களையாவது புதிய ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இதற்கான விரிவான திட்ட வரைவு மற்றும் பரிந்துரைகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முன்மொழிவு முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரது பரிசீலனை மற்றும் இறுதி ஒப்புதலைப் பெற்றவுடன் நடப்பு ஆண்டிலேயே 15,000 பேரை பணிக்கு அமர்த்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும்.
மறுபுறம் மின் வாரிய ஊழியர்களிடையே பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பதவி உயர்வு தொடர்பான சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குரிய பதவி உயர்வுகளைப் பெறுவதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையான போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பணி உயர்வுக்காக அவர்கள் நீதிமன்றங்களை நாடி, சட்டப் போராட்டங்களை நடத்தி உத்தரவுகளைப் பெற்று வந்துள்ளனர். ஒரு ஊழியருக்குரிய பதவி உயர்வு அந்தந்த குறிப்பிட்ட ஆண்டுகளிலேயே தடையின்றி வழங்கப்பட வேண்டும். அதற்கான சூழலை உருவாக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்பதால் ஊழியர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று போராடும் நிலையை அரசு தவிர்த்திருக்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்ற பின்னரும் கூட, கடந்த காலங்களில் பல்வேறு நிர்வாகக் காரணங்களால் ஊழியர்களின் பதவி உயர்வுகள் வழங்குவதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே கிரேடில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களது பணி நிறைவுக் காலத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையிலும் பதவி உயர்வு கிடைக்காமல் தவித்து வந்த சூழல் நிலவியது. சமீபத்தில் தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களைச் சந்தித்து, நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தங்களது நீண்டகாலப் பிரச்சினைகளை நேரில் விளக்கியதை அடுத்து இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்திற்குள் உரிய தகுதியுடைய ஊழியர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டு ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு பேட்ச் ஊழியர்கள் உட்பட பல்வேறு நிலைகளில் உள்ள 700க்கும் மேற்பட்டோரின் சீனியாரிட்டி தொடர்பான சிக்கல்களும் கவனத்திற்கு வந்துள்ளன. இறுதி நீதிமன்ற உத்தரவின் வழிகாட்டுதல்களின்படி இந்த சீனியாரிட்டிப் பிரச்சினைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் தகுதியானவர்களுக்கு உடனடியாகப் பதவி உயர்வுகளை வழங்குவதற்கான அறிவிக்கைகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன.
அரசால் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றிவிட முடியாது என்ற யதார்த்த நிலை இருந்தாலும் நிர்வாக ரீதியாக உடனடியாகச் செய்யக்கூடிய மற்றும் சாத்தியமான அனைத்துப் பணிகளும் தாமதமின்றி செய்து முடிக்கப்படும். மின்சார வாரியத்தின் அனைத்துப் பிரிவுகளையும் மறுசீரமைப்பு செய்து ஊழியர்களுக்குச் சேர வேண்டிய நியாயமான பலன்கள் அனைத்தும் தடையின்றிச் சென்றடைவதை அரசு தொடர்ந்து உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








