திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு முன்னணி நகைக்கடையில்,தங்க முலாம் பூசப்பட்ட போலி நகையை நயமாக மாற்றி வைத்து,5 பவுன் மதிப்பிலான அசல் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நெல்வேலி டவுன் சங்கரநாராயணன் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லாஹ் (28). இவரது மனைவி பாத்திமா சுஜிதா (25). இந்த தம்பதியினர் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை வந்த இவர்கள்,வண்ணார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடைக்கு வாடிக்கையாளர்கள் போலச் சென்றுள்ளனர். அங்குள்ள ஊழியர்களிடம்,தாங்கள் கையில் கொண்டு வந்திருந்த தங்கச் சங்கிலியைக் காண்பித்து,இதே வடிவமைப்பில் (டிசைன்) தங்களுக்கு வேறு புதிய நகை வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
Also read : நெல்லையில் ஓய்வுபெற்ற பெண் துணை ஆட்சியரிடம் ரூ.14 லட்சம் மோசடி!
அவர்களது பேச்சை நம்பிய கடை ஊழியர்களும் பல்வேறு பிரிவுகளில் இருந்த நகைகளை எடுத்துக் காண்பித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பல நகைகளைப் பொறுமையாக எடுத்துப் பார்த்த அந்த தம்பதி,இறுதியில் தங்களுக்கு எந்த நகையும் திருப்திகரமாக இல்லை எனக் கூறிவிட்டு,சாமர்த்தியமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.
வழக்கம்போல அன்றைய நாள் வியாபாரம் முடிந்ததும்,இரவில் கடையை பூட்டுவதற்கு முன்பாக ஊழியர்கள் நகைகளைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தங்கச் சங்கிலியின் எடை மற்றும் பளபளப்பில் ஊழியர்களுக்கு லேசான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த நகையை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியபோது,அது அசல் தங்க நகை அல்ல என்பதும்,வெள்ளிச் சங்கிலியின் மீது தங்கம் போலத் தத்ரூபமாக முலாம் பூசப்பட்ட போலி நகை என்பதும் தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து,உடனடியாகக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை மேலாளர் முன்னிலையில் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அதில்,நகை வாங்குவது போல நடித்த முகமது ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பாத்திமா சுஜிதா தம்பதியினர்,ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி,தாங்கள் மறைத்து வைத்திருந்த போலி நகையை அங்கு வைத்துவிட்டு,கடையின் 5 பவுன் அசல் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றது அப்பட்டமாகப் பதிவாகியிருந்தது.
இந்த நூதனத் திருட்டு குறித்து நகைக்கடையின் மேலாளர் உடனடியாக நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து,சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய தம்பதியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில்,அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மற்றொரு பிரபல நகைக்கடையிலும் இதே பாணியில் போலி நகையைக் கொடுத்து ஏமாற்ற இந்த தம்பதி முயன்றுள்ளனர். ஆனால்,இம்முறை இவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அங்குள்ள ஊழியர்கள்,தம்பதியினரைச் சமயோசிதமாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை தனிப்படை போலீசார்,தம்பதி இருவரையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து,மேலதிக விசாரணைக்காக திருநெல்வேலிக்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்,இந்த நகைத் திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாகச் செயல்பட்ட நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ரசூல் பாரூக் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும்,இந்த கும்பலுடன் தொடர்பிலிருந்த 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களிடமும் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அந்த இரு சிறுவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள முகமது ரஹ்மத்துல்லாஹ்,பாத்திமா சுஜிதா மற்றும் ரசூல் பாரூக் ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இதே போன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலோ அல்லது பெங்களூருவிலோ வேறு ஏதேனும் நகைக்கடைகளில் போலி நகைகளை மாற்றி மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தூரிதாபடுத்தியுள்ளனர் .







