காஞ்சிபுரத்தில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தனது மனைவியுடன்ஆன்மிகப்  பயணம்

காஞ்சிபுரம் , June 5: தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தனது மனைவியுடன் காஞ்சிபுரத்திற்கு ஒரு நாள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு,அங்குள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து,காஞ்சி சங்கர மடத்திற்குச் சென்று பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.

ஒரு நாள் பயணமாக மாலை 4 மணி அளவில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மற்றும் அவரது மனைவியினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,51 சக்தி பீடங்களில் மிக முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கும் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் தன் மனைவியுடன் சென்றார்.அங்கு அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு அவர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.தரிசனம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து,திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆளுநருக்கு காமாட்சி அம்மன் குங்குமம்,சிறப்பு பிரசாதங்கள் மற்றும் காமாட்சி அம்மனின் திருவுருவப் படம் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி (மண்) ஸ்தலமாகப் போற்றப்படும் ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு ஆளுநர் வருகை தந்தார்.அங்கு மூலவர் ஏகாம்பரநாதரை வணங்கி சிறப்புத் தொழுகை நடத்தினார்.பின்னர்,அதே திருக்கோயில் வளாகத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள,108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலா திங்கள் துண்ட பெருமாள் சந்நிதிக்கும் சென்று ஆளுநர் தம்பதியினர் மனமுருகி வழிபாடு செய்தனர்.ஆலயங்களின் தொன்மை மற்றும் சிற்பக் கலைகள் குறித்தும் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.

கோயில் தரிசனங்களை முடித்துக் கொண்டு,காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் சென்றார்.மடத்தின் நுழைவாயிலில் ஆளுநருக்கு நிர்வாகத்தின் சார்பில் ஏலக்காய் மாலை அணிவித்து மங்கள வாத்தியங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சங்கர மடத்திற்குள் சென்ற ஆளுநர்,அங்கு அமைந்துள்ள காஞ்சி மகாசுவாமிகளின் பிருந்தாவனத்திற்குச் சென்று மலர் தூவி,சிறப்பு மரியாதை செலுத்தி வழிபாடு செய்தார்.

அதன்பின்,காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை ஆளுநர் நேரில் சந்தித்து வணங்கி,அவர்களது ஆசிகளைப் பெற்றார்.இந்தச் சந்திப்பின் போது,ஆளுநருக்கு மார்பிள் கல்லினால் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட ஆதிசங்கரரின் திருவுருவச் சிலையை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பரிசாக வழங்கி ஆசி உரை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது,காஞ்சி சங்கர மடத்தின் மூலம் நலிவடைந்த மக்களுக்குச் செய்யப்படும் சமூக நலத்திட்டங்கள்,மடத்தின் நேரடிப் பார்வையில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள்,பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகள் மற்றும் இதர அறக்கட்டளைத் திட்டங்கள் குறித்து ஆளுநரிடம் மடாதிபதிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.மடத்தின் சமூகப் பணிகளைக் கேட்டறிந்த ஆளுநர்,மக்கள் நலன் சார்ந்த இந்த முயற்சிகளுக்குத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.ஆளுநரின் வருகையையொட்டி காஞ்சிபுரம் நகரில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »