சென்னை,ஜூன் 4: தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ இடங்களை (Super Specialty Medical Seats) மீண்டும் வழங்குவது தொடர்பான விவகாரத்தில்,எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.மேலும்,இந்த விவகாரத்தில் தமிழக மருத்துவர்களின் நலனைக் காக்க,உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாகச் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் (All India Quota) சரண்டர் செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி,முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் கடிதம் ஒன்ற எழுதியிருந்தார்.இக்கடிதத்திற்கு விளக்கம் அளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில்,இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு முக்கியத் தரவுகளைப் பட்டியலிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் மொத்தம் உள்ள 422 உயர் சிறப்பு மருத்துவ இடங்களில்,219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்,மீதமுள்ள இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கும் ஒதுக்கப்பட்டவை ஆகும் என்று அமைச்சர் தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு (Counselling) முடிந்த பின்னர்,மாநிலத் தொகுப்பில் (State Quota) நம்முடைய அரசு மருத்துவர்களைக் கொண்டு நிரப்பப்படாமல் எஞ்சிய இடங்கள் அனைத்தும் அகில இந்திய தொகுப்பிற்குச் சரண்டர் செய்யப்பட்டன என்ற வரலாற்றை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவாரா என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also read : CM விஜய் தலைமையில் முதல் கேபினட் கூட்டம்: முக்கிய முடிவுகள்!
இவ்வாறு தமிழக அரசு இடங்களைச் சரண்டர் செய்த பிறகு,மத்திய அரசால் குறைந்தபட்சத் தகுதிச் சதவீதம் (Percentile) குறைக்கப்பட்டு,அதன் அடிப்படையில் நமக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் அகில இந்திய தரவரிசைப் பட்டியலின் (All India Merit List) மூலம் நிரப்பப்பட்டதால்,தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர் என்பதையும் உதயநிதி ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த காலத் தரவுகளின்படி,கடந்த 2024ஆம் ஆண்டில் 119 இடங்களும்,2025ஆம் ஆண்டில் 145 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்குச் சரண்டர் செய்யப்பட்டன என்பதே உண்மை வரலாறு ஆகும்.
நிலைமை இவ்வாறு இருக்க,கடந்த 2025ஆம் ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வது தடுக்கப்பட்டது என்று உதயநிதி ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்று அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நடப்பு ஆண்டைப் பொறுத்தமட்டில்,மாநிலத் தொகுப்பில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும்,முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு அவற்றை அகில இந்திய தொகுப்பிற்குச் சரண்டர் செய்ய மறுத்துவிட்டது.இது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில்,தமிழக அரசின் சார்பில் உரிய முறையிலான வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,குறைந்தபட்ச தகுதிச் சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை நீதிமன்றத்தில் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்றம் தனது அண்மைய தீர்ப்பில்,நிரப்பப்படாமல் உள்ள அந்த 151 இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்குச் சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.எனினும்,மாநிலத் தொகுப்பிற்கு என ஒதுக்கப்பட்டிருக்கக்கூடிய இடங்கள் அனைத்தும் முழுமையாகத் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலமாக மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று அமைச்சர் அருண்ராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து,தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு மிகத் தீவிரமாக உள்ளது.இதனால்,தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவினை (Review Petition) தமிழக அரசு உடனடியாகத் தாக்கல் செய்துள்ளது.கிராமப்புற மக்களுக்கு உயரிய மருத்துவச் சிகிச்சை தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதிலும்,நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கீடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழக அரசு எப்போதும் உறுதியுடனும் துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.








