டெல்லி,ஜூன் 2: தமிழக பாஜகவின் முக்கிய முகமாகவும் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்த கே.அண்ணாமலை பாஜகவில் இருந்து திடீரென விலகியுள்ளார்.தனது விலகலுக்கான காரணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அவர் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் தேசியத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முக்கிய தலைவர்களைச் சந்திப்பதற்காக அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார்.முன்னதாக பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்த அண்ணாமலை தான் கட்சியில் இருந்து விலகும் முடிவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அண்ணாமலை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
To read : பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா அண்ணாமலை? தனிக்கட்சி தகவலால் தமிழக அரசியலில் அதிர்ச்சி
இந்தச் சந்திப்பின் போது தான் கட்சியில் இருந்து விலகுவதற்கான பின்னணி மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து அமித் ஷாவிடம் அண்ணாமலை நேரடியாக எடுத்துரைத்துள்ளார்.மேலும் தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சந்தித்த தோல்விக்கான காரணங்கள் தேர்தல் சமயத்தில் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பது குறித்த விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் அமித் ஷாவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவி வகித்தார்.அந்த காலகட்டத்தில் அப்போதைய ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு எதிராகப் பல்வேறு அரசியல் விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து தினந்தோறும் அறிக்கைகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகள் மூலமாகப் பேசி கட்சியின் குரலாக அவர் செயல்பட்டு வந்தார்.
மாநிலத் தலைவராக இருந்தபோது தமிழகத்தில் பாஜகவை அடிமட்ட அளவில் பலப்படுத்துவதற்காகப் பல்வேறு உத்திகளை அவர் கையாண்டார்.குறிப்பாக ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் தழுவிய நடைபயணத்தை மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார்.மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தியதுடன் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து டெல்லிக்குச் சென்று பாஜக மேலிடத் தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வந்தார்.
கடந்த 2025ஆம் ஆண்டுக்குக் பின்பு அவர் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.அதன்பின்னர் அவருக்குக் கட்சியின் தேசிய அளவில் அல்லது மத்திய அரசில் மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் எதிர்பார்ப்புக்கேற்ப எந்தவொரு முக்கியப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை.இதனால் கடந்த சில காலமாகவே அண்ணாமலை அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது அவர் பாஜகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
அமித் ஷாவுடனான சந்திப்பில் தான் மாநிலத் தலைவராக இருந்தபோது கட்சியை வளர்க்க எடுத்த முயற்சிகள் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் நடத்திய போராட்டங்கள் மற்றும் தான் பதவியில் இருந்து விலகியதற்குப் பிந்தைய தமிழக பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் அண்ணாமலை விவரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியுள்ளதைத் தொடர்ந்து அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.அவர் புதிய அரசியல் கட்சி எதையும் தொடங்கப் போகிறாரா என்ற விவாதங்களும் தற்போது தீவிரமடைந்துள்ளன.குறிப்பாக ஜூன் மாதம் வரவிருக்கும் அவரது பிறந்தநாளின் போது தனது எதிர்கால அரசியல் திட்டம் மற்றும் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.அண்ணாமலையின் இந்த திடீர் விலகல் முடிவு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.







