சென்னை , ஜூன் 1: தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான 2026-2027ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமடைந்துள்ளன.இந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக 3 பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டு 3,570 இடங்கள் கூடுதலாகத் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அதேபோல், பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் (Directorate of Collegiate Education) திங்கள்கிழமை (01.06.2026) அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தலைமையில் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறைச் செயலாளர் வி. அருண்ராய், கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் சு. விசாகன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்தக் கூட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முன்னேற்பாடுகள் மற்றும் விண்ணப்ப நிலவரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 புதிய பாடப்பிரிவுகள் :-
தமிழகத்தில் உள்ள 55 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (Government Polytechnic Colleges) முதலாமாண்டு,நேரடி இரண்டாமாண்டு (Lateral Entry) மற்றும் பகுதிநேரப் பட்டயப் படிப்புகளுக்கு (Part-time Diploma) விண்ணப்பிக்கவும்,சான்றிதழ்களைப் பதிவேற்றவும் [https://www.tnpoly.in](https://www.tnpoly.in) என்ற இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முதலாமாண்டு & பகுதிநேரப் படிப்புகளுக்கு மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ஆம் தேதி வரை 16,072 மாணவர்கள், 2,816 மாணவிகள் என மொத்தம் 18,888 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.விண்ணப்பித்த மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகள் மூலமாகவே கலந்தாய்வு (Counselling) நடத்தப்பட்டு சேர்க்கை வழங்கப்படும்.
மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் உள்ள 44 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் TATA நிறுவனத்துடன் இணைந்து ‘Industry 4.0’ திறன் மிகு மையங்கள் (Centers of Excellence) அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் நடப்பு கல்வியாண்டில் 3 புதிய நவீன பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.அவை:
- Digital Manufacturing Technologies
- Automation and Robotics
- Internet of Things (IoT)
இந்த புதிய பிரிவுகளின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் 3,570 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு மாணவர்கள் அந்தந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளையோ அல்லது தமிழகம் முழுவதும் உள்ள 110 பொறியியல் சேர்க்கை சேவை மையங்களையோ (TNEA TFC Centres) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
பொறியியல் படிப்புகள்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு
தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கைக்கான (TNEA) இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 3ஆம் தேதி தொடங்கியது.மே 31-ஆம் தேதி வரை மொத்தம் 2,81,502 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,19,968 மாணவர்கள் மற்றும் 97,659 மாணவிகள் என மொத்தம் 2,17,627 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 2ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் வரும் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை ஜூன் 6ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் (Random Number) ஜூன் 10 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.
கட்டிடக்கலை படிப்பிற்கான (B.Arch) NATA நுழைவுத் தேர்வு ஜூன் இரண்டாம் வாரம் வரை நடைபெற உள்ளதால் அந்தப் படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றங்களை ஜூன் 20ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.மேலும் மேல்நிலைத் துணைத் தேர்வு (HSC Supplementary Exam) முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வு (Supplementary Counselling) தனியாக நடத்தப்படும்.
விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மூலம் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.இப்பணி ஜூன் 15 வரை நடைபெறும். இதற்கான கால அட்டவணை விவரங்கள் மாணவர்களின் கைபேசிக்குக் குறுந்தகவலாகவும் (SMS), இணையதளத்திலும் அனுப்பப்பட்டுள்ளன. சந்தேகங்களுக்கு 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை நிலவரம்
தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 159 இளநிலை பட்டப்படிப்புகளில் (UG Courses) மொத்தம் 1,26,959 இடங்கள் உள்ளன. இதில் சுழற்சி 1-ல் (Shift 1) 1,01,022 இடங்களும், சுழற்சி 2-ல் (Shift 2) 25,937 இடங்களும் உள்ளன.
மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வழியாக மே 7 முதல் ஜூன் 29 வரை விண்ணப்பிக்கலாம். மே 29ஆம் தேதி வரை 2,24,034 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த கல்வியாண்டு முதல் சேர்க்கைக்கான வயது வரம்பு 40 ஆக நீட்டிக்கப்பட்டதன் விளைவாக, இந்த ஆண்டு 21 வயதிற்கு மேற்பட்ட 1,000 மாணவிகள், 609 மாணவர்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், NCC, அந்தமான் தமிழ் மாணவர்கள்) ஜூன் 5 மற்றும் ஜூன் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும். பொதுக் கலந்தாய்வு (General Counselling) ஜூன் 8ஆம் தேதி முதல் அந்தந்த கல்லூரிகளில் நேரடியாகத் தொடங்கும்.
விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களின் நலன் கருதி, இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு ஜூன் 1ஆம் தேதி முதல் மீண்டும் www.tngasa.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாங்களாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
சந்தேகங்களுக்குக் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் உதவி எண்களை (044-24343106 / 24342911) திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
கல்லூரிகள் திறப்பு எப்போது? ஆய்வுக் கூட்டத்தின் நிறைவாகப் பேசிய அமைச்சர், “முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அரசு, மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது,” என்றார். மேலும், இரண்டு மற்றும் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 15ஆம் தேதியும், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதியும் தொடங்கும் என்றும் அமைச்சர் பெ.விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.








