தவெக ஆட்சியிலும் தொடரும் ₹1000 உதவித்தொகை.. 10 லட்சம் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு .மகளிர் உரிமைத் தொகை பற்றியும் முக்கிய அப்டேட்!

TVK Government Continues ₹1000 Scholarship Scheme as 10 Lakh Students Receive Bank Credit, Major Update on Women Rights Allowance in Tamil Nadu

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முந்தைய அரசின் ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ் புதல்வன்’ ஆகிய கல்வி உதவித்தொகை திட்டங்கள் தங்கு தடையின்றி தொடர்வது, மாநிலத்தின் புதிய அரசியல் மற்றும் நிர்வாக நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

சென்னை , May 14 : தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடருமா என்ற விவாதங்களும் கேள்விகளும் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக எழுந்து வந்தன. இந்தச் சூழலில், அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கான ‘தமிழ் புதல்வன்’ மற்றும் மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ₹1,000 உதவித்தொகை, வழக்கம்போல மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் இந்த நடவடிக்கை, முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றித் தொடரும் என்பதற்கான முக்கிய சிக்னலாக அரசியல் நோக்கர்களால் மதிப்பிடப்படுகிறது.

Also Read : தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் மதுபானம் தடை? போதை எதிர்ப்பு நடவடிக்கையில் முதல்வர் விஜயின் அடுத்த அதிரடி திட்டம்

தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள் இந்த இரண்டு திட்டங்களின் கீழ் பயனடைந்து வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும், பொருளாதாரக் காரணங்களால் படிப்பைப் பாதியில் நிறுத்துவதைத் தவிர்க்கவும் இந்த மாதாந்திர உதவித்தொகை முக்கியப் பங்காற்றி வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே, நிதித்துறை மூலமாக இதற்கான நிதிகள் முறையாக விடுவிக்கப்பட்டு மாணவர்களின் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது, மாணவர்களிடமும் அவர்தம் பெற்றோர்களிடமும் நிலவி வந்த நிதியுதவி குறித்த நிச்சயமற்ற தன்மையைப் போக்கியுள்ளது.

முன்னதாகச் சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது, அவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். மேலும், “ஆதரிப்பவர்களுக்கு மட்டுமல்ல, எதிர்ப்பவர்களுக்குமான அரசாகவே இது செயல்படும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் பிரசாரக் களத்தில் புதிய அரசு அமைந்தால் முந்தைய நலத்திட்டங்கள் முடக்கப்படலாம் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் பரப்பி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் புதிய அரசின் ஆரம்பக்கால நிர்வாக நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் நிலவரம் குறித்தும் முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கான தொகை இன்றோ அல்லது நாளைக்குள்ளோ அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தலைமைச் செயலக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் இத்திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். மாதத்திற்குச் சுமார் ₹1,300 கோடி ரூபாயும், ஆண்டிற்குச் சுமார் ₹15,000 கோடி வரையிலும் இத்திட்டத்திற்காக அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. இருப்பினும், இதற்கான நிதி ஒதுக்கீடு கடந்த பட்ஜெட்டிலேயே சில மாதங்களுக்கு முன்பு முந்தைய அரசால் செய்யப்பட்டிருந்ததால், தற்போதைய புதிய அரசு அந்த நிதியைப் பயன்படுத்தித் தொகையை எவ்விதத் தொய்வுமின்றி வழங்கி வருகிறது.

அதே நேரத்தில், தவெகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகையை ₹1,000-லிருந்து ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், தமிழகத்தின் தற்போதைய ஒட்டுமொத்த நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, இத்தொகையை உடனடியாக உயர்த்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. நிதி ஆதாரங்களை எவ்விதம் பெருக்குவது, தேர்தல் வாக்குறுதிகளை எந்தெந்தக் கட்டங்களில் படிப்படியாகச் செயல்படுத்துவது என்பது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாகப் புதிய நிதித்துறைச் செயலாளர் சித்திக் உடனும் முதலமைச்சர் விரிவான ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய அரசின் முழுமையான நீண்டகால பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. முந்தைய ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர்கள் குழு இன்னும் கலைக்கப்படவில்லை. அதேபோல், மாநிலத் திட்டக்குழுத் துணைத்தலைவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகள் குறித்தும் புதிய அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஆலோசனைக் குழுக்களைத் தொடர்ந்து நீட்டிப்பதா அல்லது புதிய நிபுணர்களைக் கொண்டு மாற்றி அமைப்பதா என்பது குறித்தும் முதலமைச்சர் விரைவில் முடிவெடுக்க உள்ளார். இதற்கிடையே, அடுத்தடுத்து நடைபெறவுள்ள துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களுக்குத் தேவையான விரிவான அறிக்கைகளுடன் தயாராக இருக்குமாறு அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »