சென்னை , ஏப்ரல் 21 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நிறைவடையவுள்ள நிலையில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எனப்படும் ‘எக்சிட் போல்’ (Exit Poll) முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே அதிகரித்துள்ளது. வழக்கமாக வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த சில நிமிடங்களிலேயே தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் இந்த முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் எக்சிட் போல் முடிவுகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான தடை விதித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை எக்சிட் போல் முடிவுகளை வெளியிடவோ அல்லது அது தொடர்பான விவாதங்களை நடத்தவோ ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. தமிழ்நாடு மட்டுமன்றி நடப்பு தேர்தல் சுற்றில் இடம்பெற்றுள்ள கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் வாக்குப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்திருந்தாலும் அங்கேயும் எக்சிட் போல் கணிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
தேனி வனப்பகுதியில் 5 வாக்காளர்களுக்காக தனி வாக்குச்சாவடி
இதற்குக் காரணம் மேற்கு வங்க மாநிலத்தில் பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுவதே ஆகும். அங்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி மாலைதான் நிறைவடைகிறது. இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போது எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டால் அது அங்குள்ள வாக்காளர்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடும் என்பதால் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறையும் முடியும் வரை இந்தத் தடையை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
இந்தத் தடையானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 126A (Representation of the People Act 1951 Section 126A) இன் கீழ் அமல்படுத்தப்படுகிறது. இந்தச் சட்ட விதிகளின்படி தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் எக்சிட் போல் முடிவுகளை அச்சிடுவதோ, மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்புவதோ அல்லது சமூக வலைத்தளங்களில் பரப்புவதோ கடுமையான குற்றமாகக் கருதப்படும். இந்த விதியை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்ந்தே தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.







