கொடைக்கானல் , ஏப்ரல் 23 : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளை கெவி கிராமத்திற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேர்தல் களத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது’ என்ற தேர்தல் ஆணையத்தின் தாரக மந்திரத்திற்குச் சான்றாக இந்த நெகிழ்ச்சியான தேர்தல் பணி அரங்கேறியுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது இந்த வெள்ளை கெவி மலைக்கிராமம். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், இந்த கிராமத்திற்குச் செல்வதற்கு முறையான சாலை வசதிகள் ஏதும் கிடையாது. கரடுமுரடான ஒற்றையடிப் பாதையும், செங்குத்தான மலைச்சரிவுகளுமே இந்த கிராமத்தின் ஒரே போக்குவரத்து வழித்தடமாக நீடிக்கிறது. இதனால் அவசரத் தேவைகளுக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் இங்குள்ள மக்கள் நடைபயணத்தையோ அல்லது குதிரைகளையோ மட்டுமே முழுமையாக நம்பியுள்ளனர்.
Also : தேர்தல் ஆணையத்திற்கு விஜய் திடீர் கடிதம்: வாக்குச்சாவடிகளில் புதிய அதிரடி கோரிக்கை!
இந்நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்து, தேர்தல் அமைதிக்காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து, வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்களை அனுப்பும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது. போக்குவரத்து வசதியுள்ள சமவெளிப் பகுதிகளுக்குப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலம் எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அணுக முடியாத வெள்ளை கெவி கிராமத்திற்கு எந்திரங்களை எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பது தேர்தல் அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக மாறியது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் உள்ளூர் மக்களின் உதவியோடு குதிரைகளை வாடகைக்கு அமர்த்தினர். கொடைக்கானலின் வட்டகானல் பகுதியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) மற்றும் அதற்குத் தேவையான கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தும் பத்திரமாகப் பொதி மூட்டைகளாகக் கட்டப்பட்டு குதிரைகளின் முதுகில் ஏற்றப்பட்டன.
மலைப்பாதையில் தேர்தல் எந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. துப்பாக்கி ஏந்திய மத்தியத் துணை ராணுவப் படையினர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் குதிரைகளுடன் இணைந்து செங்குத்தான மலைப்பாதையில் கால்கடுக்க நடைபயணமாகப் புறப்பட்டனர். பல மணி நேரக் கடினப் பயணத்திற்குப் பிறகு, அடர்ந்த காட்டுப் பாதைகளைக் கடந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வெள்ளை கெவி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு எவ்வித சேதாரமும் இன்றி பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அசாத்திய முயற்சிக்குக் பின்னால் உள்ளூர் மக்களின் ஜனநாயகக் கடமையும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. இந்த சிறிய மலைக்கிராமத்தில் மொத்தம் 252 வாக்காளர்கள் மட்டுமே வசிக்கின்றனர். இதில் 136 ஆண்களும் 116 பெண்களும் அடங்குவர். வாக்காளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், அவர்களின் ஒற்றை வாக்கின் மதிப்பை உணர்ந்து, இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிலைநாட்டும் வகையில் தேர்தல் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும் தங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரைகளில் வருவதை இந்த கிராம மக்கள் ஒரு திருவிழா போலக் கொண்டாடி மகிழ்கின்றனர். தங்களுக்குச் சாலை வசதி இல்லாத சவால்களும் குறைகளும் நீண்ட காலமாக இருந்தாலும், அதைத் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு ஒரு தடையாக அவர்கள் என்றுமே கருதியதில்லை. தேர்தல் அதிகாரிகள் தங்களைத் தேடி வந்து வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்துள்ளதால், ஏப்ரல் 23 அன்று நூறு சதவீத வாக்குப்பதிவை எட்ட வெள்ளை கெவி கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர எல்லைக் கிராமங்களில் எவ்வித இடையூறும் இன்றி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிகளில் தங்களின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.







