நெல்லை , மே 25 : நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் கண் மருத்துவமனையின் விடுதி அறையில், நர்சிங் படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டிடங்களுக்கு வண்ணம் பூசும் (பெயிண்டர்) தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான ஷியாம் மோசஸ் நெல்சன் (20), நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு முன்னணி தனியார் கண் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு நர்சிங் பட்டயப் படிப்பு படித்து வந்தார். படிப்பிற்காக மருத்துவமனை வளாகத்தின் புதிய கட்டிடத்தில் அமைந்துள்ள மாணவர் விடுதியில் தங்கி அவர் பயின்று வந்துள்ளார்.
வழக்கம் போல நேற்று இரவும் சக மாணவர்களுடன் உணவருந்திவிட்டு, விடுதி அறையில் மோசஸ் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், அதே அறையில் தங்கியிருந்த மாரியப்பன் என்ற மாணவர் திடீரென விழித்துப் பார்த்துள்ளார். அப்போது அறையின் ஒரு பகுதியில் மோசஸ் தனது போர்வையைப் பயன்படுத்தி தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மாரியப்பனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதி காப்பாளர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர், உடனடியாக இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாகவே மோசஸ் யாரிடமும் அதிகமாகப் பேசாமல், கடுமையான மன அழுத்தத்தில் இருந்தது போன்ற தோற்றத்தில் அமைதியாகவே இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, குழந்தைகள் எழுதும் சிலேடு குச்சிகளைக் கொண்டு தனது அறையின் சுவர்களில் அவர் சில ஓவியங்களை வரைந்து வைத்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் அவரது மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மோசஸின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். “எங்கள் பிள்ளை எதற்கும் துணியும் மனப்பக்குவம் கொண்டவன் அல்ல. மருத்துவமனை அல்லது விடுதி நிர்வாகத்தின் தரப்பில் ஏதேனும் கடுமையான மன அழுத்தம் கொடுக்கப்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பதை காவல்துறை வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும்” என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவனின் செல்போன் பதிவுகள் மற்றும் விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பெற்று காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு இளம் நர்சிங் மாணவர் விடுதி அறையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சக மாணவர்கள் மற்றும் நெல்லை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் மேலோங்கும்போது, மாநில அரசின் உதவி மைய எண் 104 தொடர்பு கொண்டு இலவச ஆலோசனைகளைப் பெறலாம்).








