
சென்னை, மே 20 – தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பங்கேற்பது மற்றும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் முதலமைச்சர் விஜய் தரப்பிலிருந்து வந்த தகவல்கள் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் முக்கிய விளக்கமளித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக விசிக அமைச்சரவையில் இணையுமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வந்தது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சிக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவை விசிக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகாரப் பகிர்வு மற்றும் அமைச்சரவை பங்கேற்பு குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு மற்றும் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாகப் பேசினார்.
“இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே தெளிவாகப் பதில் அளித்துள்ளேன்” என்று குறிப்பிட்ட திருமாவளவன், கடந்த எட்டாம் தேதி மாலை 6 மணிக்கு விசிகவின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றதை நினைவுகூர்ந்தார். அந்தத் தீவிர ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே, ஒன்பதாம் தேதி மாலை 5 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்தித்து, புதிய அரசுக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகத் தங்களின் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக விளக்கினார்.
இருப்பினும், கட்சிக்குள்ளேயே இது தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் நிலவியதை அவர் மறைக்காமல் வெளிப்படையாகப் பதிவு செய்தார். உயர்நிலைக் குழு கூட்டத்திலேயே விசிக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற வலுவான கருத்து முன்வைக்கப்பட்டதாகவும், குறிப்பாகக் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் இந்த நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார். இதன் காரணமாகவே, ஒன்பதாம் தேதி பகல் 12 மணியளவில் மீண்டும் ஒருமுறை அவசர ஆலோசனையை நடத்த வேண்டிய சூழல் கட்சிக்குக் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
also read: பத்தாம் வகுப்பில் 497 மதிப்பெண்.. “செல்போன் தேவையில்லை” – நெல்லை மாணவன் அஸ்வின் பேட்டி
பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு, தற்போதைய சூழலில் “வெறும் ஆதரவை மட்டுமே வழங்குவது, அமைச்சரவையில் நேரடியாகப் பங்கேற்பதில்லை” என்ற இறுதி முடிவிற்கு விசிக வந்ததாக அவர் கூறினார். இந்த ஒருமித்த முடிவிற்குப் பிறகே நிபந்தனையற்ற ஆதரவு என்ற அறிவிப்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், அமைச்சரவை பங்கேற்பு குறித்த விவாதம் தொடக்கத்திலிருந்தே கட்சிக்குள் ஜனநாயக ரீதியாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
இதேவேளையில், தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ள புதிய திருப்பம் குறித்தும் அவர் பேசினார். விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா வெளிப்படையான அழைப்பு விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், விசிக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், இது ஆதவ் அர்ஜுனாவின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல என்றும், அது முதலமைச்சரின் அதிகாரப்பூர்வக் கருத்தாகவே தங்களுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டார்.
முதலமைச்சர் தரப்பிலிருந்து வந்துள்ள இந்த அழைப்பு காரணமாக விசிகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் மீண்டும் ஒருமுறை கட்சியின் உயர்நிலைக் குழுவைக் கூட்ட வேண்டிய கட்டாயம் இல்லை என்று கருதுவதாகக் குறிப்பிட்ட விசிக தலைவர், அதே நேரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர்கள், பொருளாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் இது குறித்து ஆலோசிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஒப்புக்கொண்டார். முதலமைச்சர் தரப்பிலிருந்து வந்துள்ள இந்த அதிகாரப்பூர்வ அழைப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கட்சித் தலைவர்களுடன் விரிவாகக் கலந்து பேசி, விரைவில் விசிகவின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மறுபுறம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து (அதிமுக) பிரிந்து வந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குப் புதிய அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம் என்று வெளியாகி வரும் தகவல்கள் குறித்தும் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே இதே விவகாரம் தன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகக் கூறினார். ஒருவேளை அதிமுகவிலிருந்து பிரிந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டால், புதிய அரசுக்கு விசிக அளித்து வரும் ஆதரவு நிலைப்பாட்டைத் தாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என்பதை ஏற்கனவே திட்டவட்டமாகப் பதிவு செய்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், தற்போது அத்தகைய முயற்சிகள் எதுவும் அரசு தரப்பில் இல்லை என்ற நம்பகமான தகவல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகத் திருமாவளவன் தெளிவுபடுத்தினார். அதிமுகவிலிருந்து விலகியுள்ள அந்தப் பிரிவினரை அமைச்சரவையில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை என்ற தகவல் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமைத் தரப்பிலிருந்தே தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அந்த விவகாரத்தில் தற்போது எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை மறைமுகமாகத் தெளிவுபடுத்தினார்.













