சென்னை: அண்மைய தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய திராவிட முன்னேற்றக் கழகம் உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்துள்ள பரபரப்பான சூழலில், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான எழிலன் நாகநாதன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாத அலைகளைக் கிளப்பியுள்ளது. “இனி இந்த நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது” என்ற வசனம் இடம்பெற்ற திரைப்படக் காட்சி ஒன்றை, “Course Correction Step 1” (பாதை திருத்தத்தின் முதல் படி) என்ற அடிக் குறிப்புடன் அவர் பகிர்ந்துள்ளதே இந்த அரசியல் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பின் திமுக தலைமையகம் முப்பத்து ஆறு பேர் கொண்ட பிரத்யேக ஆய்வுக் குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் வேளையில் இப்பதிவு வெளியாகியுள்ளது. கட்சியின் உள்கட்டமைப்பு, தலைமுறை மாற்றம் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் நிலவும் முதியவர்களின் ஆதிக்கம் ஆகியவற்றுடன் இணைத்தே அரசியல் பார்வையாளர்கள் இதனை உற்றுநோக்குகின்றனர். எழிலன் பகிர்ந்த காட்சியில் இடம்பெற்றுள்ள வசனம், நேரடியாக அரசியலுடன் ஒப்பிடப்பட்டு சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, மாவட்டச் செயலாளர் அமைப்புகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டுமா, கட்சியின் அடுத்த கட்ட அரசியல் டிஜிட்டல் தலைமுறையினரிடம் நகர வேண்டுமா மற்றும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமா போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.
Also : காஞ்சியில் கானா இசை கலைஞர்கள் வெட்டிக் கொலை
அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, திமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் முக்கிய நிர்வாகிகளும் அறுபது வயதைக் கடந்தவர்களாகவே நீடிக்கின்றனர். தற்கால சமூக வலைதள அரசியல் போக்குகளுக்கு ஏற்ப கட்சியின் அடிமட்ட அமைப்புகள் தங்களை முழுமையாகத் தகவமைத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாகவே வலுத்து வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய வரவுகள், சமூக ஊடகங்களின் அசுரத் தாக்கம் மற்றும் இளம் வாக்காளர்களின் மாறிவரும் மனநிலை ஆகியவற்றைச் சரியாகக் கணிப்பதில் ஏற்பட்ட தொய்வே தேர்தல் பின்னடைவுக்குக் காரணம் என்ற கருத்து உள்கட்சிக்குள்ளேயே புகைந்து கொண்டிருக்கிறது. “டீக்கடைகளில் பேசும் அரசியலை சமூக வலைதளங்களிலும் பேச வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், எழிலனின் இந்த ‘பாதை திருத்தம்’ பற்றிய பதிவு கட்சியின் அடிமட்ட மறுசீரமைப்பைக் கோரும் சைகையாகவே பார்க்கப்படுகிறது.
மறுபுறம், திமுகவின் தற்போதைய வலிமைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு போன்ற மூத்த தலைவர்களின் நீண்டகால அரசியல் அனுபவமே அடித்தளமாக உள்ளது. எனினும், இன்றைய மீம் கலாசாரம் மற்றும் டிஜிட்டல் அரசியல் சூழலைக் கையாள்வதற்கு இளம் தலைமுறையினருக்குச் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். இந்த உள்கட்சி யதார்த்தத்தைத்தான் எழிலன் தனது பதிவின் மூலம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார் என்ற புரிதல் அரசியல் களத்தில் மேலோங்கியுள்ளது.
இந்தப் பதிவு, அறுபது வயதைக் கடந்த கட்சியின் மூத்த தலைமைக்கு எதிரானதாகப் பொருள் கொள்ளப்பட வாய்ப்புள்ளதால், இது திமுக தலைமைக்குச் சற்றே சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், ஒரு ஜனநாயக அமைப்பில் உள்கட்சி விமர்சனங்களும் மறுசீரமைப்பு குறித்த விவாதங்களும் இயல்பான ஒன்றே என்ற பார்வையும் நிலவுகிறது. இதற்கு முன்னரும், “தற்குறிகள்” குறித்த விவாதம் எழுந்தபோது எழிலன் சமூக அடிப்படையிலான அரசியல் புரிதலின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே, தற்போதைய பதிவும் கட்சியின் எதிர்கால வளர்ச்சியை நோக்கிய அவரது உள்மன வெளிப்பாடு என அவரது ஆதரவாளர்கள் விளக்குகின்றனர்.








