
Chennai , May 13 ; தமிழக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை கவனம் ஈர்த்துள்ளது. “குதிரை பேரம் இல்லை” என்ற பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின் இறுதியில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. “இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர குதிரை பேரத்தில் ஈடுபடுகிற அரசு இல்லை” என்ற அவரது பதில், பேரவையில் இருந்த உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடையிலும் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மான விவாதத்தின் போது பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை ஆதரித்தும் எதிர்த்தும் பதிவு செய்தனர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், முதலில் உரையாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். தன்னைக் கொண்ட அமைச்சரவை மீது பேரவை நம்பிக்கை தெரிவிக்க வேண்டும் என கொண்டு வரப்பட்ட அரசினர் தீர்மானத்திற்கு பல தரப்பிலிருந்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மதச்சார்பற்ற ஆட்சி குறித்து உறுதி அளித்த CM Vijay
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய உறுப்பினர் சே. ராஜேஷ் குமார், இந்த அரசுக்கு வழங்கப்படும் ஆதரவு “மதச்சார்பற்ற அரசுக்கான ஆதரவு” என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், “நிச்சயமாக இந்த அரசு மதச்சார்பற்ற அரசாகத்தான் செயல்படும்” என உறுதியளித்தார்.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பேசிய ஆர். செல்லசுவாமி முழுமையான ஆதரவு தெரிவித்ததை விஜய் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பேசிய பன்னி அரசு, இந்த அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
“இந்த அரசு ஆதரிப்பவர்களுக்கு மட்டுமான அரசல்ல; எதிர்ப்பவர்களுக்குமான அரசும் இதுதான்” என பேரவையில் கூறப்பட்ட கருத்தை தனிப்பட்ட முறையில் பாராட்டிய விஜய், எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் தமது அரசு மதிப்பளிக்கும் என மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
முந்தைய அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும்
தமிழகத்தில் முந்தைய ஆட்சிகள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடருமா என்ற அரசியல் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். “முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும்” என அவர் உறுதியளித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பேசிய ஆமு ஷாஜகான் இந்த அரசு வரலாற்று சாதனை படைக்கும் என வாழ்த்தியதையும் விஜய் குறிப்பிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேசிய ராமச்சந்திரன் மற்றும் பிற கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தேமுதிக சார்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், எதிர்க்கட்சிகளை எதிரிகளாக பார்க்காமல் அரசு செயல்பட வேண்டும் என கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த விஜய், அந்த கருத்தை மதிப்பதாகவும் சில விஷயங்களை பின்னர் பரிசீலிப்பதாகவும் “I will be reading about it” என ஆங்கிலத்தில் குறிப்பிட்டது பேரவையில் கவனம் ஈர்த்தது.
“கொள்கைகளிலிருந்து இம்மியளவும் விலகமாட்டோம்”
தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரசுகள் மக்கள் நலனுக்காக தீட்டிய திட்டங்கள் மற்றும் சமூகநீதிக்கான சட்டங்களை நினைவுகூர்ந்த முதலமைச்சர் விஜய், “எங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களின் எண்ணங்களை மனதில் கொண்டு இந்த ஆட்சி நடைபெறும்” என தெரிவித்தார்.
பாஜக சார்பில் பேசிய எம். போஜராஜன் நடுநிலை வகிப்பதாக கூறியதையும், பாமக சார்பில் பேசிய சௌமியா அன்புமணி விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் நலன் மற்றும் மதுவிலக்கு குறித்து கருத்து தெரிவித்ததையும் விஜய் குறிப்பிட்டார். மகளிர் பாதுகாப்பு தொடர்பாக அவர் கூறிய கருத்து பேரவையில் முக்கியமாக பதிவானது. “மகளிர் பாதுகாப்பில் தவறு தவிர எந்த அரசு இம்மியளவும் இடம் தராது” என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் தீர்மானத்திற்கு எதிராக உரையாற்றிய நிலையில், பின்னர் வெளிநடப்பு செய்தது அரசியல் ரீதியாக கவனம் பெற்றது.
“குதிரை வேகத்தில் செயல்படும் அரசு”
விவாதத்தின் மிகவும் பரபரப்பான தருணமாக அமைந்தது “குதிரை பேரம்” குறித்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் விஜய் அளித்த பதில்தான். “எமது அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது” என்ற குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளித்த அவர்,
“இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுகிற அரசே தவிர குதிரை பேரத்தில் ஈடுபடுகிற அரசு இல்லை” என ஆணித்தரமாக தெரிவித்தார்.








