சென்னை: தமிழகத்தில் கோடைக் கால வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவருக்கும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் உள்ள சிக்கல்களைப் போர்க்கால அடிப்படையில் களைய உயர்மட்டக் குழுவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று (மே 12) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. கோடைக்கால குடிநீர் மேலாண்மை மற்றும் வரவிருக்கும் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ALso Read : “தலை தப்பித்தால் போதும்” குட்டி கதையால் பேரவையை அதிரவைத்த முதல்வர் விஜய்.. ஸ்பீக்கர் தேர்வில் வரலாறு பேசிய TVK தலைவர்
போர்க்கால அடிப்படையில் குடிநீர் விநியோகம் தற்போது நிலவி வரும் கடுமையான கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு எந்திரம் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் விநியோகத்தில் எழும் இடர்பாடுகளை உடனுக்குடன் கண்டறிந்து, அவற்றை விரைந்து சரிசெய்யுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதை முறைப்படுத்துவதுடன், தேவைக்கேற்ப புதிய ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக தொடர் கண்காணிப்பு குடிநீர் விநியோகம் சீராக நடப்பதை உறுதி செய்யும் பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இனிவரும் வாரங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் தங்களது மாவட்டங்களில் குடிநீர் விநியோக நிலவரம் குறித்து தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்புப் பணிகளை ஆட்சியர்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
முன்கூட்டியே தொடங்கும் வெள்ளத்தடுப்புப் பணிகள் ஒருபுறம் கோடைக்கால குடிநீர் தேவையைத் பூர்த்தி செய்யும் அதே வேளையில், மறுபுறம் எதிர்வரும் பருவமழைக் காலத்திற்கான தயாரிப்புகளையும் அரசு இப்போதே முடுக்கிவிட்டுள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்னரே, நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலதாமதமின்றி இப்பணிகளைத் தொடங்குவதன் மூலம், மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு தவிர்க்க முடியும் என சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயரதிகாரிகள் பங்கேற்பு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதன்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசுத் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய் குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று தத்தமது துறைகளின் தயார்நிலை குறித்து விளக்கினர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் திரு. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் திரு. பி. பொன்னையா, இ.ஆ.ப., பேரூராட்சிகள் இயக்குநர் திரு. பிரதீப் குமார், இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) திரு. ஆனந்த்மோகன், இ.ஆ.ப., உள்ளிட்ட பல அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, முதலமைச்சரின் அறிவுறுத்தல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.








