
சிறப்பு செய்தி : திமுகவுக்கு Strategy அமைத்த அரசியல் ஆலோசகராக இருந்து தவெக அமைச்சராக உயர்ந்த கீர்த்தனாவின் அரசியல் பயணம் கவனம் பெற்று வருகிறது.
தமிழக அரசியலில் புதிய தலைமுறை முகங்கள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்துவரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் MLA கீர்த்தனா அமைச்சராக பதவி ஏற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேர்தல் Strategy துறையில் பணியாற்றிய ஒருவர் நேரடியாக அமைச்சரவை வரை உயர்ந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றதுடன், அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அதில் 29 வயதான கீர்த்தனா இடம்பெற்றது சமூக வலைதளங்களிலும் அரசியல் விவாதங்களிலும் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read : விஜய் முதல்வராக முதல் சட்டப்பேரவை அதிரடி.. கோட் சூட்டில் என்ட்ரி, எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி கவனம்!
சிவகாசியில் வரலாறு படைத்த கீர்த்தனா
விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட கீர்த்தனா, 68,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மூன்றாவது இடத்துக்கு தள்ளியதும் அரசியல் ரீதியாக முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் சிவகாசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் MLA என்ற பெருமையையும் கீர்த்தனா பெற்றுள்ளார். பட்டாசு தொழிலுக்காக உலக அளவில் அறியப்படும் சிவகாசி பகுதியில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் சுகாதார பிரச்சனைகள் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்றன. இதையே தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக வைத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் கீர்த்தனா.
Strategy துறையில் இருந்து நேரடி அரசியலுக்கு : 1996ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த கீர்த்தனா, அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர். பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் Statistics துறையில் முதுகலைப் பட்டமும் முடித்துள்ளார்.
நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் வியூக அமைப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்திலும், Shoetime Consulting போன்ற நிறுவனங்களிலும் Political Strategist ஆக பணியாற்றியுள்ளார். அந்த காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உள்ளது. இதுவே தற்போது “திமுகவுக்கு Strategy கொடுத்தவர் இன்று தவெக அமைச்சரா?” என்ற விவாதத்தை சமூக வலைதளங்களில் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் சரளமாக பேசும் திறன் கீர்த்தனாவுக்கு உள்ளது. அண்மையில் அவர் இந்தியில் பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனத்தையும் உருவாக்கியது. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை அகில இந்திய அளவில் கொண்டு செல்லவே இந்தியில் பேசியதாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.








