
கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைவு காரணமாக சிறுநீரக கற்கள் மற்றும் UTI நோய்கள் அதிகரிக்கின்றன என மருத்துவர்கள் எச்சரிக்கை. அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு வழிகள் முழு விவரம்.
தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் வரலாறு காணாத வகையில் தீவிரமடைந்து வரும் நிலையில் ,பொதுமக்களை அச்சுறுத்தும் ஒரு மறைமுக சுகாதாரப் பாதிப்பு அமைதியாக அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு ,சிறுநீரகக் கற்கள் மற்றும் கடுமையான சிறுநீரகத் தொற்றுகளுக்கு (UTI) வழிவகுப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோடை மாதங்களில் இத்தகைய பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகச் சமீபத்திய மருத்துவக் கண்காணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
வழக்கமாகக் கோடைக்காலம் தொடங்கும் போது வெப்பம் அதிகரிப்பதால் ,இத்தகைய பாதிப்புகளுடன் நோயாளிகள் சிகிச்சை பெற வருவது ஒரு பருவகாலப் போக்காகவே மாறிவிட்டதாகக் கேர் மருத்துவமனையின் (CARE Hospitals) மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
also : இந்தியாவில் 40 வயதிற்கும் குறைவானவர்களில் Head and Neck Cancer ஏன் அதிகரிக்கிறது?
கோடைக்காலத்தில் மனித உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் குறித்து விவரிக்கும் மருத்துவ வல்லுநர்கள் ,வியர்வை மூலம் வெளியேறும் நீரின் அளவை நாம் பெரும்பாலும் துல்லியமாகக் கவனிப்பதில்லை என்று குறிப்பிடுகின்றனர். அதிகமாக வியர்க்கும் போது உடலில் உள்ள நீர் இருப்பு வேகமாகக் குறைகிறது. அதற்கு ஈடாகப் போதிய அளவு தண்ணீர் குடிக்காத போது ,உடலில் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) மெதுவாக ஏற்படுகிறது. இந்த நிலையில் ,சிறுநீரின் அளவு குறைந்து அது அடர்த்தியான நிலைக்கு (Concentrated urine) மாறுகிறது. இதன் காரணமாகச் சிறுநீரில் உள்ள கால்சியம் ,ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற கனிமங்கள் ஒன்றிணைந்து படிகங்களாக உருவெடுத்து ,காலப்போக்கில் சிறுநீரகக் கற்களாக மாறுகின்றன. தினசரி அடிப்படையில் சிறிய அளவில் தண்ணீர் குறைவாகக் குடிப்பதே இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என்றும் ,இது திடீரென ஏற்படுவதில்லை என்றும் மருத்துவர் நவீன் குமார் எச்சரிக்கிறார்.
இந்தச் சுகாதாரப் பாதிப்பானது வெறும் சுற்றுச்சூழல் வெப்பத்தால் மட்டுமே உருவாவதில்லை; மாறாக ,மக்களின் மாறுபட்ட வாழ்க்கை முறையும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. நகரப் பகுதிகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ,அதிக உப்புத்தன்மை கொண்ட ஜங்க் உணவுகள் மற்றும் செயற்கை சர்க்கரை கலந்த குளிர்பானங்களை உட்கொள்வது பாதிப்பைத் தீவிரமாக்குகிறது. அதேவேளையில் ,கிராமப்புறங்களில் வெயிலில் நீண்ட நேரம் கடின உழைப்பில் ஈடுபடுவதும் ,வேலை செய்யும் இடங்களுக்குப் போதிய தண்ணீர் எடுத்துச் செல்லாத பழக்கமும் முதன்மைக் காரணியாக உள்ளது. உணவுப் பழக்கவழக்கங்களும் ,நீர்ச்சத்து குறைபாடும் இணையும் போது சிறுநீரகம் சார்ந்த சிக்கல்கள் மிக வேகமாக அதிகரிக்கும் என்று மருத்துவர் வேணு மன்னே விளக்குகிறார்.
சிறுநீரகக் கற்கள் மட்டுமன்றி ,சிறுநீர்க்குழாய் தொற்று (UTI) பாதிப்புகளும் இக்காலத்தில் பெருமளவில் பதிவாகின்றன. உடலில் நீர்ச்சத்து குறையும் போது சிறுநீர் வெளியேறும் அளவு குறைவதால் ,பாக்டீரியாக்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படாமல் தங்கி விடுகின்றன. இது தீவிரத் தொற்றுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாகப் பெண்கள் ,நீரிழிவு நோயாளிகள் மற்றும் புரோஸ்டேட் (Prostate) சுரப்பி பாதிப்பு உள்ள ஆண்கள் இந்தத் தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
திடீரென ஏற்படும் கடுமையான முதுகு வலி அல்லது பக்கவாட்டு வலி ,சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் அல்லது சிறுநீரில் இரத்தம் கலந்து போதல் ,சிறுநீரின் அளவு குறைதல் ,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ,காய்ச்சல் ,வாந்தி மற்றும் உடல் சோர்வு ஆகியவை இதற்கான முக்கிய அறிகுறிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பது அவசரச் சிகிச்சை தேவைப்படும் அபாயகரமான நிலைக்குத் தள்ளிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நடப்பு ஆண்டில் இந்த பாதிப்புகள் பெருமளவு அதிகரிக்கக் காலநிலை மாறுபாடுகளே (Climate variability) முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் நீடிக்கும் வெப்ப அலைகளும் ,தண்ணீர் குடிக்கும் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் நிலைமையை மோசமாக்கியுள்ளன. தற்கால வாழ்க்கை முறையில் தாகம் எடுத்த பிறகு தண்ணீர் குடிக்கும் பழக்கமே பரவலாக உள்ளது. ஆனால் ,தாகம் எடுப்பது என்பது உடலின் இறுதி எச்சரிக்கை உணர்வு மட்டுமே என்றும் ,அதற்குள்ளாகவே உடலில் நீர்ச்சத்து குறைபாடு தொடங்கப்பட்டிருக்கும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தாகம் எடுப்பதற்கு முன்பாகவே போதிய அளவு தண்ணீர் குடிப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது எப்போதும் குடிநீரைக் கையில் எடுத்துச் செல்வதுடன் ,தர்பூசணி ,வெள்ளரிக்காய் ,இளநீர் போன்ற இயற்கையான நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். செயற்கைக் குளிர்பானங்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைத் தவிர்ப்பதுடன் ,மதிய வேளையில் தேவையின்றி வெளியில் செல்வதைக் குறைக்க வேண்டும்.
Disclaimer: The information shared in this article is for general awareness and educational purposes only and should not be construed as medical advice or diagnosis/treatment.








