சென்னை , ஏப்ரல் 27 : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. வேட்புமனுவில் உள்ள நிதி விவரங்களை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளதால் தேர்தல் களத்தில் விஜய்க்கான உடனடி சட்டச் சிக்கல்கள் அனைத்தும் நீங்கியுள்ளன.
கடந்த சில நாட்களாகவே அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் விவாதப் பொருளாக இருந்த இந்த வழக்கை பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார். விஜய் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தன் மனைவி சங்கீதாவிற்கு ரூபாய் 12.6 கோடி கடன் வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிதி விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் சொத்து விவரங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டிய மனுதாரர் இது தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரானது என்பதால் வேட்புமனுவை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
24,000 ஆண்டுகள் பனிக்குள் ‘உறைந்து’ கிடந்த ZOMBIE புழு மீண்டும் உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்
ஏற்கனவே விஜயின் ரூபாய் 100 கோடி சொத்து வெளிப்படுத்தலில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி சில விவாதங்கள் அரசியல் தளத்தில் கிளப்பப்பட்டிருந்த நிலையில் இந்த ரூபாய் 12.6 கோடி கடன் விவகாரம் தவிக முகாமிற்குச் சற்று நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்கத் தேவையான வலுவான சட்ட அடிப்படைகளோ காரணங்களோ இல்லை எனக் குறிப்பிட்டு வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்குப் பெரும் நிம்மதியையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. சொத்து விவரங்கள் மற்றும் நிதி நிலைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விஜயின் அரசியல் வருகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்த எதிர்த்தரப்பினருக்கு இந்தத் தீர்ப்பு சட்ட ரீதியான முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.







