சென்னை , ஏப்ரல் 25 : சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி ஒரு புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளது. இதன்படி நகரின் முக்கிய 300 சாலைகளில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வழிகாட்டி பலகைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய உள்கட்டமைப்பு முயற்சி சென்னை நகர போக்குவரத்து மேலாண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகரில் கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகங்களுக்குச் செல்வோர் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை நீடிக்கிறது. இதனுடன் விபத்துகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக போக்குவரத்துத் துறை புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. இந்தச் சூழலில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தெளிவான மற்றும் துல்லியமான தகவல்களை முன்கூட்டியே வழங்கும் நோக்கில் இந்த அதிநவீன வழிகாட்டி பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது விபத்துகளைத் தடுப்பதுடன் பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : திமுகவின் 2026 தேர்தல் வாய்ப்பு: “சூப்பராக உள்ளது” என ஸ்டாலின் அதிரடி
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பாரம்பரிய சைகை பலகைகளைக் காட்டிலும் இந்த புதிய பலகைகள் முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பத் தரத்துடன் அமையவுள்ளன. இதில் எழுத்துகளை விட எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய படங்கள் மற்றும் குறியீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தமிழ் மொழி தெரியாத வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கூட எந்தவித சிரமமும் இன்றி வழியைக் கண்டறியும் வகையில் ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ எனப்படும் காட்சி வழிக் தகவல் தொடர்பு முறை இதில் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் ஓட்டுநர்களுக்குச் சாலைகள் தெளிவாகத் தெரிவதற்காகப் பிரதிபலிக்கும் ‘ரிஃப்ளெக்டிவ்’ தொழில்நுட்பம் இந்தப் பலகைகளில் இடம்பெறுகிறது. இதனால் மிகக் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் ஓட்டுநர்களால் சிக்னல்களையும் வழிகளையும் தூரத்திலிருந்தே துல்லியமாகக் கணிக்க முடியும். இதன் அடுத்தகட்டமாக சென்னையின் மிக முக்கிய சந்திப்புகளில் முப்பரிமாண தொழில்நுட்பம் (3D Display) மூலம் நகரங்களின் பெயர்கள் மற்றும் வழி விவரங்களைக் காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இத்தகைய தொழில்நுட்பம் சாலை வழிகாட்டுதலுக்குப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உள்கட்டமைப்புப் பணிகள் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்னதாக முதற்கட்டமாக அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த மண்டலங்களில் அமல்படுத்தப்படவுள்ளன. இதன்படி நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், வேளச்சேரி மற்றும் பெருங்குடி ஆகிய ஐந்து முக்கிய பகுதிகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்தப் பகுதிகளில் சாலை மேலாண்மையைச் சீரமைப்பது மிக அவசியமானது என்பதால் இங்கிருந்து பணிகளைத் தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.







