வெளியான 20 நாளில் ஆயிரம் கோடி வசூல் ! இந்திய திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம்

image search 1768834097939

ஜனவரி 19, 2026; மும்பை : இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களுக்கு 100 ஆண்டுகளை கடந்த வரலாறு இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பாலிவுட் சினிமா பெரும் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. அதற்கு அடுத்ததாக டோலிவுட், கோலிவுட் சினிமாக்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக வசூல் சாதனைகளில் தன்னை நிலைநிறுத்தி வந்த பாலிவுட் சினிமா கடந்த சில ஆண்டுகளாக பெரும் சறுக்கல்களையே சந்தித்து வருகிறது. தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தெலுங்கு மொழியில் இருந்து உருவான சில கமர்சியல் படங்கள்தான் இதற்கு காரணம் ! பாலிவுட்டில் 2016 ம் ஆண்டு வெளியான “தங்கல்” திரைப்படம் உலக அளவில் ரூ.2000 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை நிகழ்த்தி இருந்தது. அதற்கு முன்பு எந்த படமும், 1000 கோடியை கடந்து வசூல் சாதனை புரியவில்லை.

இந்த நிலையில் அடுத்த ஆண்டிலேயே தெலுங்கு மொழியில் வெளியான “பாகுபலி 2” திரைப்படம் ரூ.1800 கோடியை வசூலித்து இந்திய திரைப்பட உலகை திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டவில்லை. பின் 2022 ம் ஆண்டு தெலுங்கில் வெளியான “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் ரூ.1800 கோடியையும், கன்னடத்தில் வெளியான “கேஜிஎப் 2” திரைப்படம் 1200 கோடியையும் வசூலித்து கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் 2020 ம் ஆண்டு முதல் பாலிவுட்டின் பல திரைப்படங்கள் தயாரிப்பு செலவை கூட ஈடுகட்ட முடியாமல் திணறின. பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களும் கூட மண்ணை கவ்வி வந்த நிலையில், 2023 ம் ஆண்டு வெளியான “பதான்” மற்றும் “ஜவான்” திரைப்படங்கள் பாலிவுட்டிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூபாய் ஆயிரம் கோடி வசூல் சாதனையை எட்டின. “அனிமல்” என்ற திரைப்படம் 900 கோடி வரை வசூலித்தது. 2021 ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. “ஸ்த்ரீ 2” திரைப்படம் மட்டும் ரூ.800 கோடி வருவாயை எட்டியது. அதே நேரம் தெலுங்கில் வெளியான “புஷ்பா 2” திரைப்படம் ரூ.1800 கோடியையும், கல்கி திரைப்படம் 1050 கோடி ரூபாயும் வசூலித்தது.

கடந்த 2025 ம் ஆண்டில் மீண்டும் சரிவை சந்தித்தது பாலிவுட் சினிமா உலகம் ! ஆனால் சரிந்த அந்த நிலையை மீண்டும் அதே ஆண்டின் இறுதியில் தூக்கி நிறுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அது என்னவென்றால்,
2025 ம் ஆண்டின் நவம்பர் மாதம் வரை வெளியான இந்திய சினிமாக்களில் ஒன்று கூட ரூ.1000 கோடி வசூல் சாதனையை எட்டவில்லை. பாலிவுட்டில் இருந்து 2025 ன் ஆரம்பத்தில் வெளியான “சாவா” திரைப்படம் மட்டும் ரூ.800 கோடியை வசூலித்திருந்தது. மேலும் கன்னடத்தில் இருந்து வெளியான “காந்தாரா 2” திரைப்படம் ரூ.900 கோடியை ஈட்டியது. அதே நேரம் தமிழ்நாட்டில் இருந்து வெளியான “கூலி” திரைப்படம் அந்த சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் ரூ.500 கோடி என்ற வசூலுடன் நின்று போனது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5 ம் தேதி வெளியான “துரந்தர்” என்ற பாலிவுட் திரைப்படம், வெளியான 20 நாட்களில் ரூ.1000 கோடியை ஈட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரன்வீர்சிங், சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தில் இந்திய உளவுத்துறையை சேர்ந்த ஒருவர், பாகிஸ்தான் சென்று உளவு பணியை மேற்கொள்ளும் வகையில் கதை செய்யப்பட்டுள்ளது. படம் நெடுகிலும் ரத்தம் தெளிக்கும் சண்டை காட்சிகளின் காரணமாக இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பாதவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையிலும் ரூபாய் ஆயிரம் கோடி வசூலித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது அதுமட்டுமின்றி 2025 ம் ஆண்டில் ரூ.1000 கோடி வசூல் செய்த ஒற்றைப்படம் என்ற பெருமையையும் “துரந்தர்” திரைப்படம் பெற்றிருக்கிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், அதற்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

news desk
news desk
Articles: 94

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »