தூத்துக்குடி , ஜூன் 18 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. கோடை காலத்தை நினைவூட்டும் வகையில் பதிவாகி வந்த கடுமையான வெப்பத்தின் காரணமாக, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலையிலிருந்தே வழக்கம்போலவே வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. மதிய நேரத்திற்குப் பிறகு வளிமண்டலக் கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வானில் திடீரெனக் கார்மேகங்கள் திரளத் தொடங்கின. மாலை நேரத்தில் திடீரெனப் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கொட்டித் தீர்த்த இந்தத் தீவிர மழையின் காரணமாக கோவில்பட்டி நகரின் முக்கியச் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவில்பட்டி நகர் பகுதி மட்டுமன்றி அதனைச் சுற்றியுள்ள திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், இனாம்மணியாச்சி, மூப்பன்பட்டி, மந்திதோப்பு மற்றும் இலுப்பையூரணி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறப் பகுதிகளிலும் பரவலாகப் பலத்த மழை பெய்துள்ளது.








