ராஜஸ்தானில் டீக்கடை போர்வையில் உளவு வேலை… பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட இளைஞர் சிக்கினார்!

ராஜஸ்தான்   ,ஜூன் 17 : ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் தேநீர்க்கடை நடத்தி ,இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு கசியவிட்ட இளைஞரை அம்மாநில சிஐடி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Rajasthan Spy Case: Tea Stall Worker Arrested for Allegedly Leaking Indian Military Secrets to Pakistan

இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியான ஜெய்சால்மரில் இந்த உளவு நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. எல்லையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ,ராணுவ வாகனங்கள் செல்லும் முக்கியப் பாதையில் தேநீர்க்கடை நடத்தி வந்த 26 வயது இளைஞரான முஸ்தாக் அலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ,பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) கொடுத்த திட்டத்தின்படியே இந்த தேநீர்க்கடை தொடங்கப்பட்டது என்பது அம்பலமாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அண்டை நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மிக முக்கியப் பகுதி என்பதால் ,அங்குள்ள சிஐடி காவல்துறையினர் மற்றும் உளவுப்பிரிவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முஸ்தாக் அலியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ,உளவுத்துறையினர் அவரது நடமாட்டங்களை ரகசியமாகக் கண்காணித்து ,அவரது செல்போன் தரவுகளை ஆய்வு செய்தனர். அதில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்பின் கையாளுநர்களுடன் (Handlers) நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

also : உலகின் மிக வயதான தலைவர்கள் பட்டியல்: 80 வயதைத் தொட்ட அதிபர் ட்ரம்ப் !யார் முதலிடத்தில் உள்ளார் ?

முஸ்தாக் அலி தேநீர்க்கடை அமைத்திருந்த பகுதி வழியாகத்தான் இந்திய ராணுவத்தினரும் ,எல்லை பாதுகாப்புப் படையினரும் (BSF) தங்களது எல்லைப் பகுதிப் பணிகளுக்குச் செல்வது வழக்கம். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர் ,தேநீர்க்கடையில் அமர்ந்து கொண்டே ராணுவப் வீரர்களின் நடமாட்டங்களைக் கண்காணித்துள்ளார். ராணுவப் படைகள் எப்போது செல்கின்றன ,எந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றன ,எத்தனை வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன போன்ற உளவுத் தகவல்களைத் திரட்டியுள்ளார். மேலும் ,எல்லையை நோக்கிச் செல்லும் ராணுவ வாகனங்களை ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ,அவற்றை பாகிஸ்தானில் உள்ள தனது கையாளுநர்களுக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாகத் தொடர்ச்சியாக அனுப்பி வந்துள்ளார்.

இந்த உளவு வேலைக்காக முஸ்தாக் அலியின் பல்வேறு வங்கித் கணக்குகளுக்குப் பாகிஸ்தானில் இருந்து தவணை முறையில் சுமார் 25,000 ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை சிஐடி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதற்கான டிஜிட்டல் மற்றும் நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து ,காவல்துறையினர் அவரை முறைப்படி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முஸ்தாக் அலி ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியப் பின்னணிகள் மற்றும் இந்த உளவு வலையமைப்பில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பதை முழுமையாக விசாரிப்பதற்காக ,நீதிமன்றம் அவரை 6 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. எல்லையோரப் பகுதியில் தேநீர்க்கடை போர்வையில் நடந்த இந்த உளவுச் சம்பவம் ராணுவ வட்டாரத்திலும் பாதுகாப்பு அமைப்புகளிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »